4 டேங்கர் லாரிகளில் கலப்பட நெய்.. திண்டுக்கல் நிறுவனம் மீது திருப்பதி போலீசில் தேவஸ்தானம் புகார்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனம் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் அளித்துள்ளது. திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்து 4 டேங்கர் லாரிகளில் விநியோகம் செய்ததாக புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இநிலையில், திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலின் புனிதம் அசுத்தப் படுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்த நாளே ஒரு ஆய்வக ரிப்போர்ட் வெளியானது. லட்டு மாதிரியின் ஆய்வக சோதனை முடிவு அறிக்கையின்படி, மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை திருப்பதி லட்டுவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் பெரியளவில் பூதாகரமானது.
திருப்பதி லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்யும் நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தரப்பில், தங்களது தயாரிப்பை சோதனைக்கு உட்படுத்தத் தயார் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அது மட்டுமல்லாமல், நெய் மாதிரிகளை மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர விதிகளை கடைபிடிக்க தவறிவிட்டதாக, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனத்துக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) நோட்டீஸ் அனுப்பியது. லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தானம் பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் அளித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு விநியோகித்த நெய்யில் கலப்படம் செய்ததாக திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தானம் பொது மேலாளர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் நிபந்தனைகளை மீறி, விலங்குகளின் கொழுப்புகள் உள்ளிட்ட பொருட்களை கலப்படம் செய்து 4 டேங்கர் லாரிகளில் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் விநியோகம் செய்ததாக அந்த புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications