திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சிண டிக்கெட்டுகள்! வெறும் 3 நிமிடங்களில் 25000மும் காலி!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் அங்கப்பிரதட்சிணம் செய்ய இன்று காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்கிய நிலையில் வெறும் 3 நிமிடங்களில் அனைத்தும் புக்காகிவிட்டன. கிட்டதட்ட 25 ஆயிரம் டிக்கெட்டுகளும் முடிந்துவிட்டதால் டிக்கெட் கிடைக்காத பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஏப்ரல் மாதத்தில் அங்கப்பிரதட்சிணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் 10 மணிக்கு ஓபன் செய்ததும் 3 நிமிடங்களில் அனைத்தும் தீர்ந்துவிட்டன. வெள்ளிக்கிழமைகளில் அங்கப்பிரதட்சிண சேவை இல்லை. மற்ற நாட்களில் நள்ளிரவு 1 மணிக்கு அங்கப்பிரதட்சிண சேவை உள்ளது. இதற்காக பக்தர்கள் முன்கூட்டியே வரிசையில் வந்து புஷ்கரணியில் குளித்துவிட்டு சென்று அங்கப்பிரதட்சிணம் செய்ய வேண்டும். அங்கப்பிரதட்சிணம் செய்பவர்களுக்கு சுவாமி தரிசனம் கிடையாது. இதற்காக இவர்கள் தனியாக டிக்கெட் புக் செய்து கொள்ள வேண்டும்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஒவ்வொரு சேவைகளுக்கும் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் கடந்த 21 ஆம் தேதி ஆர்ஜித சேவைகளான கல்யாணோத்சவம், தோமலா சேவை, சுப்ரபாத சேவை உள்ளிட்டவைகளுக்கு முன்பதிவு தொடங்கியது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான அங்கப்பிரதட்சிண டோக்கன்களை இன்றைய தினம் காலை 10 மணிக்கு முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அது போல் ஏப்ரல் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய இன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு நடைபெறுகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை என்பதால் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்ய முற்படுவார்கள்.
ஹை ஸ்பீடு இன்டர்நெட் இருந்து, திருப்பதி செல்வோரின் பெயர், ஆதார் எண், வயது உள்ளிட்ட தகவல்கள் இருந்தால் போதும் உடனடியாக டிக்கெட்டை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். முன்பதிவு செய்யத் தெரியாதவர்கள் ப்ரவுசிங் சென்டரில் கொடுத்தாலும் செய்து கொடுப்பார்கள்.

ஏப்ரல் மாதம் ரூ 300 சிறப்பு தரிசன டோக்கன்களை பெற நாளை ஸ்லாட் ஓபன் ஆகும். அப்போது மேற்கண்ட தகவல்களுடன் தயாராக இருந்து புக் செய்து கொள்ளலாம். நாளை மாலையே திருமலை, திருப்பதி உள்ளிட்ட இடங்களில் அறைக்கான புக்கிங்கும் நடைபெறும்.

திருப்பதியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலம் என்பதால் சர்வ தரிசனத்திற்கு செல்வோர் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. அது போல் கோடை வெயிலும் கொளுத்தி எடுக்கும் வாய்ப்பு உள்ளது. திருப்பதியை பொருத்தமட்டில் ரூ 300 சிறப்பு தரிசனம், சர்வ தரிசனம், நடைபாதை தரிசனம் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.












Click it and Unblock the Notifications