காஞ்சிபுரம் கோயிலின் 312 சவரன் தங்கம் நகைகள் எங்கே? திருப்பூரில் நறுக்னு கேட்ட இந்து முன்னணி
திருப்பூர்: காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி உற்சவர்கள் சிலை செய்ய பக்தர்களால் கொடுக்கப்பட்ட 312 சவரன் நகை எங்கே போனது என்று இந்து முன்னணி காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறது.. மேலும் 312 சவரன் நகை எப்படி மாயமானது? எங்கே போனது? என்பது குறித்து தனி நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சேதமடைந்த சோமாஸ்கந்தர் உற்சவர் சிலைக்கு பதிலாக, 2015ஆம் ஆண்டு புதிய ஐம்பொன் சிலை செய்ய அரசாணை வெளியானது.

ஸ்தபதி முத்தையா வழிகாட்டுதலில், சுவாமி மலையில் சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் சிலைகள் உருவாக்கப்பட்டன.
ஐம்பொன் சிலைகள் தங்கம்
ஐம்பொன் சிலைகளில் 5 சதவீதம் தங்கம் சேர்க்க வேண்டும் என அறநிலையத்துறை அப்போது உத்தரவிட்டது. இதற்காக பக்தர்களிடம் இருந்து தங்கம் நன்கொடையாக பெறப்பட்டது. ஆனால், சிலைகளில் தங்கம் சேர்க்கப்படவில்லை என்ற சந்தேகம் எழுந்தது.
2017ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து, ஐஐடி நிபுணர் குழு ஆய்வு நடத்தியது. அதில், சிலைகளில் துளி அளவு கூட தங்கம் சேர்க்கப்படவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து ஸ்தபதி, கோயில் அதிகாரிகள் உள்ளிட்ட 9 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். மேலும், முன்னாள் அறநிலையத்துறை உயர் அதிகாரிகளும் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
312 சவரன் தங்க ஆபரணங்கள்
ஐம்பொன் சிலைகளுக்காக பெறப்பட்ட 312 சவரன், ரூ.3.12 கோடி மதிப்புள்ள தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்போது நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளதால், ஏகாம்பரநாதர் கோயில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆயிரம் கோயில்களின் நகரம் காஞ்சிபுரம். இங்குள்ள ஆயிரம் மூர்த்திகளுடன் காஞ்சி காமாட்சியும், ஏகாம்பரநாதரும், வரதராஜ பெருமாளும், கைலாசநாதரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்
தங்க நகைகள் எங்கே
2015-ம் வருடம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி போன்ற உற்சவ மூர்த்தி சிலைகளை செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன் பேரில் சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி அம்மன் சிலை செய்யப்பட்டது.
அதற்காக பக்தர்களிடம் 312 சவரன் தங்க நகை நன்கொடையாக பெறப்பட்டது. இந்த உற்சவ மூர்த்திகள் செய்யும்போது ஒவ்வொரு சிலைகளிலும் 5% தங்கம் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதி. அதாவது 8.7 கிலோ தங்கத்தை சேர்க்க வேண்டும்.
இந்நிலையில் 2017 ஆம் வருடம் அண்ணாமலை என்பவர் உற்சவர் சிலைகள் மீது தங்கம் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தின் பேரில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு ஐஐடி குழுவினரால் மேற்கண்ட சிலைகளை ஆய்வு செய்ததில் ஒரு கிராம் தங்கம் கூட சேர்க்கப்படவில்லை என்ற செய்தி பக்தர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்து முன்னணி கேள்வி
தற்போது கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் செய்ய பக்தர்கள் மூலமாக பெறப்பட்ட தங்கத்தில், நாலரை கிலோ கொள்ளையடிக்கப்பட்டது, ஐயப்ப பக்தர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி பரபரப்புக்கு உள்ளாகியது.
இதற்கு முன்னோடியாக தமிழகத்திலும், ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் செய்வதில் தங்கம் மோசடி நடைபெற்று இருப்பது தமிழக பக்தர்களிடையே அதிர்ச்சியையும், மன வேதனையையும் அளித்துள்ளது. இது, இந்து சமய அறநிலையத்துறை மீது நம்பிக்கையின்மை உருவாக்கியுள்ளது.
சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி உற்சவர்கள் செய்ய பக்தர்களால் கொடுக்கப்பட்ட 312 சவரன் நகை எப்படி மாயமானது? எங்கே போனது? என்பதையும் தமிழகத்தில் இது போல வேறு எந்தெந்த கோயில்களில் பக்தர்களால் கொடுக்கப்பட்ட நகைகள் மாயமாகியுள்ளன என்பதையும் கண்டறிய தனி நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications