ஏடிஎம் எந்திரத்தில் கார்டு சிக்கிடுச்சா.. இப்படியும் நடக்கலாம் உஷார்.. திருப்பூரை அதிர வைத்த இளைஞர்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் ஏ.டி.எம் எந்திரத்தில் கார்டு மூலம் பணம் எடுக்க முயன்ற கடை உரிமையாளருக்கு உதவி செய்வது போல் நடித்து ஏடிஎம்மில் ரூ.47 ஆயிரம் பணத்தை திருடிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குன்னத்தூர் நவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு 38 வயது ஆகிறது. இவர் அந்த பகுதியில் பழைய டயர் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த வியாக்கிழமை அன்று குன்னத்தூரில் இருந்து பெருந்துறை செல்லும் ரோட்டில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம் எந்திரத்தில் கார்டு மூலம் ரூ.1000 எடுத்திருக்கிறார். பின்னர் 2-வது முறையாக பணம் எடுக்க முயன்ற போது ஏ.டி.எம் கார்டு எந்திரத்தில் சிக்கி இருக்கிறது.

கார்டை வெளியே எடுக்க பலமுறை முயன்றும் கார்டு ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து வெளியே வரவில்லை. இதனை அருகில் நின்று கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கவனித்து "உங்கள் கார்டை எந்திரத்தில் இருந்து எடுக்க முடியாது. எனவே வங்கிக்குச் சென்று புகார் செய்யுங்கள்"் என்று கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய ராஜேந்திரன் அங்கிருந்து வங்கிக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். சிறிது தூரம் சென்றதும் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.47 ஆயிரம் எடுக்கப்பட்டதாக வந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்குச் சென்று சோதனை செய்த போது ரூ.47 ஆயிரம் பணம் ஏ.டி.எம் கார்டு மூலமாக எடுக்கப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.க்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர்.
அப்போது ராஜேந்திரனுக்கு உதவி செய்வதாக கூறிய இளைஞர் ஒருவர்பணத்தை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று அக்கம் பக்கத்தில் போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது அவர் திருவாய்முதலியூரை சேர்ந்த ஆட்ேடா டிரைவர் ரூபன் (21) என்பது விசாரணையில் தெரியவந்தது.
ரூபன் திருப்பூர் சிவன் தியேட்டர் பகுதி அருகே பதுங்கி இருப்பது தெரியவந்ததை அடுத்து, போலீசார் அங்கு சென்று ரூபனை கைது செய்து விசாரித்துள்ளனர். விசாரணையில் ராஜேந்திரன் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்கும் போது அருகில் நின்ற அவரது கார்டின் பின் நம்பரை ரூபன் தெரிந்து கொண்டிருக்கிறார். பின்னர் ராஜேந்திரனிடம் ஏ.டி.எம் கார்டு சிக்கிவிட்டதாக ஏமாற்றி அவர் சென்றதும் கார்டை வெளியே எடுத்து அதன் மூலம் பணம் திருடியிருக்கிறார். இதையடுத்து போலீசார் ரூபனை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.47 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications