"டிரைவிங் லைசென்ஸ்" பிடுங்கப்படும்.. "இதை" மட்டும் செய்யாதீங்க.. வாகன ஓட்டிகளுக்கு ஆர்டிஓ உத்தரவு
திருப்பூர்: ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து துறை முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.. இந்த உத்தரவு குறித்து பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவருமே வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், குழந்தைகளை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்தை சந்திக்க நேரிடுகிறது.. இதுகுறித்து போக்குவரத்து துறை பலமுறை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

குறிப்பாக, 2012ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் கல்வி நிறுவன வாகன விதிகள் சட்டம் அமல்படுத்தப்பட்டது... அப்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும், பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என பல்வேறு விதிகள் கொண்டுவரப்பட்டன.
கோர்ட் கண்டிப்பு: ஆனாலும் கல்வி வாகனங்களில் அதிகளவு மாணவர்களை ஏற்றுவது, வாகனங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது, வாகனங்களில் பள்ளியின் பெயர் குறிப்பிடாமல் இருப்பது, மாணவர்களை கண்காணிக்க போதிய நடத்துனர் இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு செயல்கள் நடப்பதாக கூறப்பட்டது.
இதற்கு பிறகு, கல்வி நிறுவன வாகனங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவை நீதிமன்றமும் பிறப்பித்திருந்தது.
அதுமட்டுமல்லாமல், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும், குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள் மற்றும் ரிக்சாக்கள் மூலம் எவ்வாறு அனுப்புகின்றனர் இதனை பள்ளிகள் எவ்வாறு ஏற்கின்றனர், இதுபோன்ற செயல்களை நீதிமன்றம் ஏற்காது.. பள்ளி வாகனங்களுக்கென பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
பள்ளிக்குழந்தைகள்: ஆனால் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள், ரிக்ஷாக்கள் போன்ற வாகனங்களுக்கு என்ன விதிமுறைகள் உள்ளது? என்றும் நீதிமன்றம் அன்றே கேள்வி எழுப்பியிருந்தது.
இதையடுத்து, அந்தந்த மாவட்டங்களில் போக்குவரத்துஅதிகாரிகள் இதற்காகவே கூட்டங்களை நடத்தி, வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள்.. 2 நாட்களுக்கு முன்புகூட, வேலூரில் ஒரு கூட்டம் நடந்தது. அப்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) வெங்கடேசன் பேசும்போது, "பள்ளிக்கு மாணவ-மாணவிகளை ஆட்டோவில் ஏற்றி செல்லும்போது மிகவும் பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும். ஆட்டோவில் அதிகமான மாணவர்களை ஏற்றி செல்லக்கூடாது.
வளைவுகள்: அதேபோன்று பள்ளிக்கு செல்வதற்கு நேரமாகி விட்டது என்று அதிவேகத்தில் ஆட்டோவை இயக்க கூடாது. மாணவர்கள் ஆட்டோவில் பயணிக்கும் போது வேகமாக சென்று பிறவாகனங்களை முந்தி செல்லவோ, வளைவுகளில் வேகமாகவோ செல்லக்கூடாது. ஆட்டோவில் தகுதிச்சான்று, பதிவுச்சான்று, ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்" என்று எச்ரித்திருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தில் பள்ளி ஆட்டோவில் மாணவர்களை அதிக அளவில் ஏற்றுவதால் விபத்துகள் ஏற்படுவதாக போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகம்: தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாலை வீரபாண்டி பிரிவில் உள்ள தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தலைமை தாங்கினார்.
அதில் விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்தும், பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் விதிமுறைகளை பின்பற்றுவது குறித்தும் ஓட்டுனருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் ஆட்டோவில் அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படும் ஓட்டுனரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
வரவேற்பு: பள்ளிக்குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஆட்டோவில் ஏற்றினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உத்தரவு மாவட்டந்தோறும் பிறப்பிக்கப்பட்டு வருவது, பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பினை பெற்றுவருகிறது.












Click it and Unblock the Notifications