விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் 5000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
திருப்பூர்: விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்க போகிறார்கள். அப்படி போகும் போது, பாம்புக்கடி, விஷப்பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.. இதை தவிர்க்கும் வகையில் செல்போன் மூலமாக விவசாய பம்பு செட்டுகளை இயக்கும் கருவி உள்ளது. இந்த கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு மத்திய,மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விதை மானியம், உர மானியம், ஆண்டுக்கு 6000 உதவி தொகை, என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வேளாண் இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல், பெண் விவசாயிகளுக்கும் 50% மானியம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கூடுதலாக 20% அதிகமான மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 40% மானியம் வழங்கப்படுகிறது.

வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க இயந்திரங்கள் வாங்கவும் மானியமும் அரசு தருகிறது. வட்டார அளவிலான இயந்திர வாடகை மையங்கள் அமைக்க 40% மானியமும், கிராம அளவிலான வாடகை மையங்கள் அமைக்க 80% மானியமும் அரசு தருகிறது. உழுதல், நடவு செய்தல், அறுவடை செய்தல், மற்றும் இதர வயல் வேலைகளை இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ள இந்த உதவியை செய்கிறது. இதேபோல் இவலச மின்சார இணைப்பும் விவசாயிளுக்கு அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் செல்போன் மூலமாக விவசாய பம்பு செட்டுகளை இயக்கும் கருவிக்கு அரசு மானியம் தருகிறது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிவிப்பில், "விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்க செல்கிறார்கள். அப்படி போகும் போது, பாம்புக்கடி, விஷப்பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
இதை தவிர்க்கும் வகையில் தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து செல்போன் மூலம் இயக்கவும், நிறுத்தவும் உதவுகிறது.
இதற்காக ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7 ஆயிரமும், மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் 250 பம்புசெட்டுகளுக்கு இந்த கருவி அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பழைய மின்மோட்டாரை மாற்றி புதிய மின்மோட்டார் வாங்குவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மானியமும், தரிசு நிலங்களில் சிறு தானிய சாகுபடிக்கு உழவு மானியமாக அதிகபட்சமாக ஹெக்டேருக்கு ரூ.5,400 மானியமும் வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் திருப்பூர், உடுமலை, தாராபுரம் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளரை 94432 43495 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறினார்.












Click it and Unblock the Notifications