அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் திருப்பூருக்கு அடித்த ஜாக்பாட்.. வியட்நாம், வங்கதேசத்திற்கு ட்விஸ்ட்
திருப்பூர்: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அதேநேரம் வியட்னாமிற்கு 46 சதவீதமும், வங்க தேசத்திற்கு 37 சதவீதமும், சீனாவிற்கு 34 சதவீதமும் வரி விதித்துள்ளார்.இந்த வரி விதிப்பில் இந்தியாவுடன் பின்னலாடை உற்பத்தியில் போட்டிபோடும் வியட்னாம், வங்கதேசம், சீனாவிற்கு அதிகம்.. எனவே இந்தியாவில் திருப்பூருக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. டிரம்பின் அறிவிப்பால் திருப்பூருக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக திருப்பூர் ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினமும் கூறினார்.
அமெரிக்க அதிபராக2-வது முறையாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டிரம்ப், தங்கள் நாட்டு பொருட்களுக்கு உலக நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன் தங்கள் நாட்டுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக அறிவித்தார். இதனையே தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதியாக அளித்தார். அதன்படியே ஆட்சிக்கு வந்தவுடனே இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப், ஏப்ரல் 2-ந்தேதி புதிய வரி பட்டியலை வெளியிடுவேன் என அறிவித்தார்.. அதன்படியே அண்மையில் உலக நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பை அறிவித்தார்.

இந்தியாவிற்கு 26 சதவீதம்
இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 52 சதவீத வரி விதிக்கப்படுகிறது. எனவே இந்திய பொருட்களுக்கும் அதே அளவிலான வரி விதிக்கப்பட்டால், ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்தார்.
சீனாவிற்கு அதிகம்
இதைப்போல மேலும் பல்வேறு நாடுகளுக்கான பரஸ்பர வரி பட்டியலையும் டிரம்ப் வெளியிட்டார். இதில் சீனாவுக்கு 34 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 20 சதவீதம், தென்கொரியாவுக்கு 25 சதவீதம், ஜப்பானுக்கு 24 சதவீதம், தைவானுக்கு 32 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார்.
பரஸ்பரி வரி எவ்வளவு
இதேபோல் கம்போடியா (49), வியட்நாம் (46), இலங்கை (44), பாகிஸ்தான் (29), தாய்லாந்து (36), சுவிட்சர்லாந்து (31), இந்தோனேஷியா (32), மலேசியா (24), தென்ஆப்பிரிக்கா (30), வங்காளதேசம் (37), இஸ்ரேல் (17), பிலிப்பைன்ஸ் (17) மற்றும் சவுதி அரேபியா, இங்கிலாந்து, பிரேசில், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துருக்கி, கொலம்பியா போன்ற நாடுகளுக்கு தலா 10 சதவீதம் என சுமார் 60 நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார்.
ஆனந்த் சீனிவாசன்
இந்தியாவிற்கு 26 சதவீதம் வரி என்று டிரம்ப் அறிவித்திருப்பது சில துறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றாலும், திருப்பூருக்கு தொழில் வாய்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. இதுபற்றி பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், திருப்பூருக்கு ஓரளவு பெட்டராக இருக்கிறது.. திருப்பூரின் பெயரில் (இந்தியாவிற்கு) 26 சதவீதம் வரி போட்டாலும், சீனாவிற்கு 34 சதவீதம் வரியும், 43 சதவீதம் வியட்னாம் மீதும், வங்கதேசம் மீது 37 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு எல்லாம் இரண்டு கண்கள் போனால்.. எனக்கு ஒரு கண் போய்விட்டது என்ற அட்வான்டேஜ் திருப்பூருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டெக்ஸ்டைலுக்கு நல்லது" என்று கூறினார்.
திருப்பூருக்கு சாதகம்
இதனிடைய திருப்பூர் ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம் டிரம்ப்பின் வரி விதிப்பால், திருப்பூருக்கு ஏற்படும் சாதகம் குறித்து கூறும் போது, திருப்பூருக்கு அமெரிக்க ஆர்டர் நிறைய வருவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. மற்ற போட்டி நாடுகளை ஒப்பிடும் போது, 26 சதவீதம் என்பது நமக்கு குறைவாக இருக்கிறது.. வியட்நாமிற்கு 46 சதவீதம் வரி போட்டிருக்கிறார் டிரம்ப்.. பாகிஸ்தானுக்கு 29 சதவீதமும், வங்கதேசத்திற்கு 37 சதவீதமும், சீனாவிற்கு 34 சதவீதம் வரி போட்டிருக்கிறார்.. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது நமக்கு வரி குறைவு.. எனவே இதனை சாதகமாக எடுத்துக் கொள்ளலாம்.
மந்த நிலை
ஏனெனில் போட்டி நாடுகளுக்கு போக வேண்டிய ஆர்டர்கள் எல்லாமே நம்முடைய நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் 100 சதவீதம் இருக்கிறது.. ஆனால் இன்றைக்கு ஜவுளி துறையில் ஒரு மந்த நிலை இருக்கிறது.. நூல் உள்பட உற்பத்தி பொருட்களின் விலைகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி ஏறுகிறது. எனவே இதுபோல் இல்லாமல், அமெரிக்க வரிவிதிப்பால் உள்ள சாதகங்களை ஆராய்ந்து ஆர்டர்களை கொண்டுவருவதற்கு அரசு தனியாக திட்டமிட வேண்டும். இதற்கு அரசு ஊக்கத்தொகையை அதிகப்படுத்த வேண்டும்...
பருத்தி மீது வரி
மூலப்பொருட்களின் விலையை சீராக்குவதுடன், விலை ஏறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்... பருத்தி இறக்குமதி வரியான 11 சதவீதத்தை இந்தியா நீக்க வேண்டும்.. ஜவுளி ஏற்றுமதி வளர்ச்சிக்கு புதிய கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும்.. அப்படி செய்தால் நமக்கு ஆர்டர்கள் வரும்.. ஆர்டர்களை செய்வது மாதிரி சூழல்கள் உருவானால், நிறைய அன்னியச் செலாவணி இந்தியாவற்கு வரும்" என்றார்.












Click it and Unblock the Notifications