திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம்! இப்படி ஒரு பிரச்சினையா? தவிக்கும் பயணிகள்! தீர்வு எப்போது?
திருச்சி: திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் இருந்து மெயின் ரோட்டிற்கு வருவதற்கு 1.5 கி.மீ நடந்து செல்ல வேண்டியுள்ளது என்றும், எனவே, மெயின் ரோட்டில் இருந்து புதிய முனையத்துக்கு செல்ல பேருந்து வசதி செய்ய வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ.1,112 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனிடையே பணிகள் முழுமை அடையாததால் விமான நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

விமான நிலையத்தின் புதிய முனையத்தில் 100 சதவீத பணிகள் முடிவடைந்தது. இங்கிருந்து விமானங்களை இயக்குவதற்காக விமான நிலைய அதிகாரிகள் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தினர். இதைத்தொடர்ந்து, விமானங்கள் இயக்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். அதன்பேரில் புதிய முனையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடு நடைபெற்றது.
இதன்படி கடந்த ஜூன் 11 ஆம் தேதி காலை 6 மணி முதல் விமான நிலையத்தின் புதிய முனையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய முனையத்தில் 60 வருகை கவுன்ட்டர்கள், 44 புறப்பாடு கவுன்ட்டர்கள் என மொத்தம் 104 நுழைவு கவுன்ட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
75 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ஆண்டுக்கு 44.50 லட்சம் பயணிகளை கையாள முடியும். ஒரு மணி நேரத்தில் 3,480 பயணிகளை கையாள முடியும். பயணிகளுக்கும் பயணிகளுடன் வருவோருக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய முனையத்தில் 10 ஏரோ பிரிட்ஜ்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தற்போது 5 ஏரோ பிரிட்ஜ்களை பயன்படுத்தவுள்ளோம். மீதமுள்ள 5 ஏரோ பிரிட்ஜ்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும்.
புதிய முனையம் சாலையிலிருந்து சற்று தொலைவில் உள்ளதால் புதிய முனையத்திற்கு அரசு பேருந்துகளை இயக்க வேண்டுமென போக்குவரத்து துறையினரிடம் கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது புதிய முனையத்தில் இருந்து, முக்கிய சாலைக்கு வர 1.5 கி.மீட்டர் தொலைவு உள்ளதால், அதற்காக போக்குவரத்து வசதி சரிவர செய்யப்படவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதிய முனையத்திற்குள் வரும் ஆட்டோக்களுக்கு ரூ. 80, டாக்சிகளுக்கு, 150 ரூபாய் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்களது உடமைகளுடன் 1.5 கி.மீ நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, மெயின் ரோட்டில் இருந்து புதிய முனையத்துக்கு செல்ல பேருந்து வசதி செய்ய வேண்டும்.
அதேபோல, விமான நிலையப்பகுதியில் ஆட்டோ கட்டணத்தையும் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது, விமான நிலையத்திற்கு பேருந்து வசதி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.எனவே, விரைவில் பேருந்து வசதி கிடைக்கும்" என்று கூறினர்.












Click it and Unblock the Notifications