திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக அரியலூரில் இருந்து வந்த 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று உடையவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 51 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 47 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்று விட்டனர்.

இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர், அரியலூர் 2, பெரம்பலூர் 4, புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 11 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு வந்த தொழிலாளர்கள் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரியலூரில் இருந்து புதிதாக கொரோனா பாதிப்புடன் வந்தவர்களை திருச்சிக்கு அழைத்து வராமல் அரியலூரிலேயே வைத்து சிகிச்சை அளிக்கும்படி திருச்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களை எந்த மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது என்ற குழப்பம் நீடித்தது.
அதன்பிறகு ஒரு வழியாக முடிவு செய்து நேற்று மாலை நிலவரப்படி அரியலூரில் இருந்து 8 பேர் திருச்சி அழைத்து வரப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதன்மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக மற்ற மாவட்டங்களில் இருந்து நோயாளிகளை அனுப்பும்பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications