விசிக மாநாடு முடிந்த சிறிது நேரத்தில் வந்த போன்! மகிழ்ச்சியை கொண்டாட முடியாத சூழலில் திருமாவளவன்!
திருச்சி: திருச்சியில் நேற்று நடைபெற்ற விசிகவின் வெல்லும் சனநாயகம் மாநாடு பெரும் வெற்றியடைந்த நிலையில், அந்த மகிழ்ச்சியை கூட கொண்டாட முடியாத சூழலில் உள்ளார் திருமாவளவன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் சனநாயகம் என்ற முழக்கத்தோடு பிரம்மாண்ட மாநாடு நேற்றைய தினம் திருச்சியில் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். மாலை 4 மணிக்கு ஆரம்பித்த மாநாடு இரவு 9.30 மணிக்குள் முடிந்துவிட்டது. அதன் பிறகு மாநாட்டில் கலந்துகொண்ட தொண்டர்கள் அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். எதிர்பாராத அளவில் கூட்டம் திரண்டிருந்ததால் திருமாவளவன் வழக்கத்தை விட அதிக உற்சாகமாக காணப்பட்டார்.

அதேபோல் மாநாடு முடிந்ததும் இதற்கு இரவு பகல் பாராமல் உழைத்த நிர்வாகிகளிடம் தனது அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார். இப்படி அவர் மகிழ்ச்சியாக இருந்த சூழலில் அவருக்கு தெரிவிக்கப்பட்ட தகவல் பேரதிர்ச்சியை கொடுத்ததோடு மொத்த மகிழ்ச்சியையும் காலி செய்துவிட்டது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த விசிக நிர்வாகிகள் முத்துக்குமார், அன்புச்செல்வன், யுவராஜ் ஆகிய 3 பேர் திருச்சியில் மாநாடு முடிந்து வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக வந்த தகவலை அடுத்து திருமாவளவன் அதிர்ந்து போயிருக்கிறார்.
மேலும் 17 பேர் காயங்களோடு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள் என்ற தகவலும் அவரை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. இதனால் மிகுந்த கவலை கொண்ட திருமாவளவன் சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்துப் பேசி விபத்தில் சிக்கி மீட்கப்பட்டோருக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்கச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், மது அருந்தும் பழக்கம் உடையவர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்களை அழைத்து வரக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு திருமாவளவன் ஏற்கனவே அறிவுறுத்தல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications