திருச்சியில் நெகிழ்ச்சி: உடல் உறுப்பு தானம் செய்த ஆட்டோ டிரைவர், பாதிரியார்.. அரசு சார்பில் மரியாதை!
திருச்சி: திருச்சியில் உடல் உறுப்புகளை தானம் செய்த ஆட்டோ டிரைவர் பாபு, அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் ஆகிய இருவருக்கும் அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
திருச்சி உக்கடை அரியமங்கலம் புங்களாயி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் பாபு (38), ஆட்டோ டிரைவராக இருந்து வந்தார். இவர் கடந்த 24-ஆம் தேதி இரவு அரியமங்கலம் பால்பண்ணை அருகே திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாகச் சென்ற வாகனம் மோதியதில் பாபு படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பாபு இறந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
உடற்கூராய்வுக்குப் பிறகு இறுதி அஞ்சலி செலுத்த அவரது உடல் வீட்டிற்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது. அங்கு தமிழ்நாடு அரசின் ஆணைப்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ், பொன்மலை சரக போலீஸ் உதவி கமிஷனர் காமராஜ், அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவனந்தம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பாபுவின் குடும்பத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறினார். அப்போது பாபுவின் தாயார் தனது இளைய மகனுக்கு அரசு வேலை வழங்குமாறு கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார். பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார். அதன் பின்னர் பாபுவின் உடல் ஓயாமரி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
இதேபோல, திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் திரு இருதய மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும், தலைமை ஆசிரியராக இருந்து வந்தவர் பாதிரியார் பிரான்சிஸ் சேவியர். இவர் கடந்த 22ஆம் தேதி பள்ளியில் நடந்த கூட்டத்தில் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த அவர், மூளைச்சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது விருப்பப்படி அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் பாதிரியார் பிரான்சிஸ் சேவியர் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேலுவுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது திருச்சியில் இருவருக்கு அரசு மரியாதை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications