6,000 கிலோ மட்டன்! 4,000 கிலோ சிக்கன்! 30,000 முட்டை! டன் கணக்கில் பிரியாணி! அசத்திய கே.என்.நேரு!
திருச்சி: திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் டெல்டா மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டன், சிக்கன், முட்டை என அசைவ விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் அமைச்சர் நேரு.
மொத்தமே வாக்குச்சாவடி முகவர்கள் 12 ஆயிரத்து 645 பேர் தான் என்றாலும் 30,000 பேர் சாப்பிடும் வகையில் பிரியாணி செய்து கொடுக்குமாறு திருச்சியின் பிரபல பிரியாணி கடையான கே.எம்.எஸ்.ஹக்கீம் நிறுவனத்தில் ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைத்தே மட்டன் பிரியாணி டன் கணக்கில் தயாரிக்கப்பட்டு சுடச்சுட பரிமாறப்பட்டுள்ளது. அதேபோல் மட்டன் பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள சிக்கன் கிரேவி, அவித்த முட்டை, தயிர் பச்சடி என ஏராளமான வகைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
திருச்சியில் இன்று மாலை 15 மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தனக்கு சொந்தமான கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்டமாக செய்து வைத்திருக்கிறார் அமைச்சர் நேரு.

மாலை 4 மணிக்கு மேல் தான் பயிற்சி பாசறைக் கூட்டம் என்றாலும் கூட மதிய சாப்பாட்டுக்கே வாக்குச்சாவடி முகவர்கள் கேர் பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு , கடலூர் மேற்கு, மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர் ,தஞ்சாவூர் வடக்கு , தஞ்சாவூர் மத்திய தஞ்சாவூர் தெற்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய, திருச்சி வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, புதுக்கோட்டை வடக்கு என 15 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு அவர்கள் திக்குமுக்காடும் வகையில் விருந்து போட்டிருக்கிறார் நேரு.
6,000 கிலோ மட்டன், 4,000 கிலோ சிக்கன், 30,000 முட்டை, 1200 கிலோ தக்காளி, 600 கிலோ இஞ்சி, 3,000 கிலோ வெங்காயம் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பிரியாணி தயாரிக்க சீரக சம்பா அரிசி பயன்படுத்தப்பட்டிருகிறது.













Click it and Unblock the Notifications