சாட்டை துரைமுருகன் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? அவரது மனைவியிடம் விசாரணை.. நேரில் ஆஜராக சம்மன்
திருச்சி: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தென்காசி என பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தொடங்கி கோவை, மதுரை, திருச்சி, சிவகங்கை, தென்காசி உள்பட பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளரும், செய்தி தொடர்பாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது.
5 என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை 5 மணி முதல் சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். சாட்டை துரைமுருகன் வீட்டில் பல்வேறு முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#WATCH | Tamil Nadu: NIA conducts raid at Naam Tamilar Katchi party's functionary Saatai Durai Murugan's residence in Trichy pic.twitter.com/6XpAHt9u97
— ANI (@ANI) February 2, 2024
மேலும், சாட்டை துரைமுருகன் தற்போது சென்னையில் உள்ள நிலையில், அவரது மனைவி மாதரசியிடம் சுமார் 3 மணி நேரம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, வரும் 7ஆம் தேதி சாட்டை துரைமுருகன் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவரது மனைவியிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சாட்டை துரைமுருகன், பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி திரட்டியதாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்தை மீட்டுருவாக்கம் செய்ய திரள் நிதி திரட்டுவதாகவும் வந்த புகார்களின் அடிப்படையிலேயே அவரது வீட்டில் சோதனை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.











Click it and Unblock the Notifications