தாலியுடன் ரெடியாக இருந்த இந்து முன்னணியினர்.. தெறித்து ஓடிய காதல் ஜோடிகள்..மலைக்கோட்டையில் பரபரப்பு
இந்து அமைப்பினர் திருச்சி மலைக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்
திருச்சி: காதலர்கள் ஜோடியாக மலைக்கோட்டையில் குவிய முயன்றபோது, கையில் தாலியுடன் காத்திருந்த இந்து அமைப்புக்களால் பரபரப்பு ஏற்பட்டது...!
காதலர் தினம் என்றாலே சில இந்துத்துவா அமைப்புகளுக்கு அலர்ஜி வந்தது போலத்தான்... அதனால் காதலர் தினத்தன்று வீம்புக்கு என்றே எதையாவது ஏடாகூடமாக செய்து பரபரப்பை ஏற்படுத்துவது இயல்பான ஒன்று.
அதிலும் பெரும்பாலான வடமாநிலங்களில் ஆண் நாய், பெண் நாய் இரண்டையும் குளிக்க வைத்து, அழகுபடுத்தி, மாலை அணிவித்து, ஊர்வலமாக கொண்டு வந்து மந்திரங்கள் முழங்க கல்யாணம் நடத்தி வைப்பார்கள்..

இளம்பெண்கள்
நம்ம ஊரில் இந்து முன்னணி சார்பில் சீர்திருத்த திருமணம் என்ற பெயரில் கழுதைக்கும், நாய்களுக்கும் கல்யாணம் நடந்திருக்கிறது... நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.. இந்த கல்யாணத்தை செய்துமுடித்துவிட்டு, காதலர் தினத்துக்கு எதிராக கோஷங்களையும் எழுப்புவார்கள்.. காதல் என்ற பெயரில் பெரும்பாலும் இளம் பெண்களிடம் அத்துமீறல் மற்றும் பாலியல் வன்கொடுமை நடப்பதாக இவர்கள் காரணம் சொல்கிறார்கள்... குறிப்பாக கலாச்சார சீரழிவு என்ற வார்த்தையையே நிறைய பிரயோகிக்கிறார்கள்.

இந்து முன்னணி
காதலர் தினம் குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆர்எஸ்எஸ், பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு மேற்கத்திய கலாச்சாரமான காதலர் தினம் கொண்டாடுவதும் ஒரு காரணம் என்று சொல்லி வருகிறது... பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு மேற்கத்திய கலாச்சாரமான காதலர் தினம் கொண்டாடுவதும் ஒரு காரணம் என்பதே இவர்களின் வாதமாக உள்ளது.

போராட்டம்
இன்றைய காதலர் தினத்திலும் இதுபோன்ற போராட்டங்கள் சில இடங்களில் நடந்துள்ளது.. திருச்சி மாவட்டத்தின் அடையாள சின்னமாக விளங்குவது மலைக்கோட்டையாகும்.. இந்த மலைக்கோட்டை அடிவாரத்தில், மாணிக்க விநாயகரும், மத்தியில் தாயுமான சுவாமியும், உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் அருள்பாலிக்கின்றனர்...

கலாச்சார சீரழிவு
காதலர் தினமான இன்று, மலைக்கோட்டையில் குவியும் காதலர்களால் காதல் கோட்டையாக மாற்றப்படுவதை கண்டித்தும், காதலர் தினம் என்ற பெயரில், கோவிலுக்கு வந்து கலாச்சாரச் சீரழிவில் ஈடுபடுவதை கண்டித்தும், கோயில் முன்பு, அகில பாரத வீர விவேகானந்தர் பேரவை, அனுமன் சேனா சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவிலுக்கு வரும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க, மஞ்சள் கயிற்றுடன் கூடிய தாலி வழங்க, கையில் தாலியுடன் போராட்டமும் நடத்தப்பட்டது.. ஆர்ப்பாட்டம் முடித்து போராட்டக்காரர்கள் கோயிலுக்குள் நுழைய முற்பட்டனர்...

பரபரப்பு
ஆனால், அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.. இந்து அமைப்புகளின் போராட்டம் காரணமாக, மலைக்கோட்டை கோயில் போலீசார் பாதுகாப்பு பணியில் மிக தீவிரமாகவும் ஈடுபட்டனர். அத்துடன், கோயிலுக்கு ஜோடியாக வந்த காதலர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை பத்திரமாக திருப்பி அனுப்பினர். காதலர்கள் ஜோடியாக அங்கு குவிய முயன்றபோது, கையில் தாலியுடன் காத்திருந்த இந்து அமைப்புக்களால் திருச்சி மலைக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications