விசிக பட்டியலின மக்களை ஏமாற்றுகிறதாம்.. சில நாதாரிகள் சொல்கிறார்கள்.. ஆவேசமான திருமாவளவன்!
திருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சி பட்டியல் சமூக மக்களை ஏமாற்றுவதாக சில நாதாரிகள் விமர்சிக்கிறார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசி இருக்கிறார். தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் சமூக, பொருளாதார, அரசியல் தளத்தில் முன்னேற்றம் அடைவதற்கு விசிகவின் எழுச்சியே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மதச்சார்பின்மை காப்போம் பேரணி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பேரணியில் விசிகவினர் பலரும் கோட், சூட் அணிந்தும், நீல நிற சட்டை அணிந்தும் பங்கேற்றனர். 3 கிமீ தூரத்திற்கு நடைபெற்ற இந்த பேரணியின் வழிநெடுகிலும் பேனர்கள் மற்றும் கட்சிக் கொடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

திருமாவளவன் பேச்சு
இந்த பேரணிக்கு பின் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், சில நாதாரிகள் புறப்பட்டுள்ளார்கள்.. நாதாரிகள் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாது.. ஊதாரிகள் என்றால் தெரியும். நாம் பட்டியல் சமூக மக்களை ஏமாற்றுகிறோமாம்.. இதனை என்னவென்று சொல்வது.. இவர்களுக்கு யார் பதில் சொல்வது.. தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் சமூக, அரசியல், பொருளாதார, கலை தளத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்றால், விசிகவின் எழுச்சிதான் காரணம்.
விசிகவின் எழுச்சி
தம்பி வேடன் சில நாட்களுக்கு முன்பாக பேசினார். அப்போது 35 ஆண்டுகளாக பேசிய அரசியலை 3 நிமிட பாடலில் கூறி இருக்கிறார் என்றேன். அதற்கு அவர், நீங்கள் பேசுவதால் தான் நாங்கள் பாடுகிறோம். எங்களுக்கு துணிச்சல் வருகிறது என்று தெரிவித்தார். அனைத்து துறைகளிலும் காலரை தூக்கி கொண்டு முன்னேறுகிறார்கள் என்றால், அது விசிகவின் எழுச்சியால் ஏற்பட்ட விளைவாகும்.
ஏன் கோட் சூட் போட வேண்டும்?
நீங்கள் ஒருவர் கோட் சூட் போட்டால் போதாதா.. ஏன் அனைவரையும் அப்படி போட்டு கொண்டு வர சொல்கிறீர்கள் என்று கேட்டார்கள். என் கண்ணால் கட்டட வேலை செய்வோர் கோட் சூட் அணிந்து வருவதை பார்க்க வேண்டும். ஆட்டோ ஓடுகிறவர் கோட் சூட் அணிந்து நடக்க வேண்டும். காந்தி வெறும் உடலோடு இருந்தது அவருக்கு மரியாதை.
அறிவு பரம்பரை
ஆனால் அம்பேத்கர் குடும்பம் வறுமையில் வாடிய போதும், உடையில் கவனம் செலுத்தியவர் அம்பேத்கர். சனாதன சக்திகளே அம்பேத்கர் இறந்துவிட்டார் என்று நினைக்காதீர்கள்.. இதோ அம்பேத்கரின் கருத்தியல் வாரிசுகள் இருக்கிறோம். எங்களிடம் யாராலும் அரசியல் பேச முடியாது. சாதிவாரி, ஆண்ட பரம்பரை என்று சொல்வோர் அல்ல.. அறிவு பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
யாரை சொல்கிறார்?
அனைத்து மேடைகளிலும் கண்ணியம் காக்கும் திருமாவளவன் ஆவேசமாக நாதாரிகள் என்று பேசி இருப்பது விவாதமாகி இருக்கிறது. அதேபோல் இன்னொரு பக்கம் நாதாரிகள் என்று திருமாவளவன் யாரை சொல்கிறார் என்ற பேச்சும் தொடங்கி இருக்கிறது. மேலும், திருச்சியை மையப்படுத்தி விசிக தொடர்ந்து செயல்பட்டு வருவதால், இம்முறை திருச்சியில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications