விஜய் வாகனத்தின் முன்பாக ஆபத்தான பயணம்.. கட்டுப்பாடுகளை மீறி கம்பங்கள், மரங்களில் ஏறிய தவெகவினர்!
திருச்சி: தவெக தலைவர் விஜய், இன்று திருச்சியில் தமது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் நிலையில், தவெக தொண்டர்கள் திரண்டுள்ளனர். கடும் கட்டுப்பாடுகள் அறிவுறுத்தப்பட்ட போதிலும், கம்பிகளில் ஏறி நிற்பதும், விஜய்யின் பிரச்சார வாகனத்தை பின் தொடர்ந்து செல்வதும், ஆபத்தான முறையில் வாகனத்தின் முன்பாகச் செல்வதும் அரங்கேறி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் பிரசார பயணத்தை விஜய் திருச்சியில் இருந்து தொடங்கி உள்ளார். இந்த பிரசாரம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று விஜய்யின் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் நம்புகின்றனர். தவெக தொடங்கப்பட்டு இதுவரை 2 மாநில மாநாடுகளை நடத்தியிருக்கும் விஜய், தற்போது முதல்முறையாக மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தனது முதல் பிரச்சாரத்தில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

திருச்சியில் விஜய்
தவெக தலைவர் விஜய், சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் கூடியிருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சி விமான நிலையத்தில் அவரை பார்ப்பதற்காக, வெளியே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். இதில், பலர் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்தனர். எனினும் ஏராளமானோர் தடுப்புகளை தாண்டி உள்ளே சென்றனர்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரச்சார வாகனத்தில் விஜய் சென்று கொண்டிருக்கிறார். அவர் செல்லும் வழிநெடுகிலும் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் சூழ்ந்துள்ளனர். மரக்கடை பகுதிக்கு சென்று பரப்புரை மேற்கொள்ளும் நிலையில், வழி நெடுகிலும் ஆயிரக்கணக்காக தொண்டர்கள் மேளதாளம், கட்சி கொடி அசைத்தபடி திரண்டு நிற்கின்றனர்.
தொண்டர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு
விஜய்யை பார்க்க ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத கூட்டம் வந்த காரணத்தினால் உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தொழில் பாதுகாப்பு படையினர் தடுப்பு வேலி மற்றும் கயிறு கட்டி அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
ஆபத்தான முறையில்
மேலும், சாலையோரங்களில் உயரமான சுவர்கள், கம்பங்கள், மரங்கள், சிலை கூண்டுகளில் தவெக தொண்டர்கள் ஏற முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தவெக சார்பில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி, விஜய்யின் பிரச்சார வாகனத்தை தவெக தொண்டர்கள் பின்தொடர்ந்து சென்று வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு, விஜய் பேசுவதும் தாமதமாகி வருகிறது.
கட்டுப்பாடுகளை மீறி
முன்னதாக, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடரக் கூடாது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என தவெக சார்பில் அக்கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications