போருக்கு முன்பு குலதெய்வம்! தேர்தலுக்கு முன் மக்களை கும்பிடு! மைக் ஆஃப்பாகியும் பஞ்ச் பேசிய விஜய்
திருச்சி: போருக்கு போறதுக்கு முன்பு குலதெய்வத்தை கும்பிடுவது போல் அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு மக்களை கும்பிடணும், திருச்சி என்றாலே திருப்புமுனைதான் என திருச்சி மரக்கடை தேர்தல் பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார்.
திருச்சியில் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை விஜய் தொடங்கினார். இன்று காலை சென்னையிலிருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் வந்த விஜய், அங்கிருந்து 4 கி.மீ. தூரம் உள்ள திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே தொண்டர்கள் புடைச்சூழ அவரது பிரச்சார வாகனம் ஊர்ந்து வர 5 மணி நேரம் ஆனது.

இதனால் தொண்டர்களில் பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. நிறைய பேர் குழந்தைகளுடன் வந்து தண்ணீரின்றி அவதிப்படுகிறார்கள். பல இடங்களில் விஜய் வருகையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு வழியாக திருச்சி மரக்கடையை வந்தடைந்தார் விஜய்.
அப்போது தொண்டர்கள் TVK TVK என கத்தினர். விஜய் பிரச்சார வாகனத்தின் மீது ஏறியதும் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். இதைத் தொடர்ந்து அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். அவர் மீது கட்சி துண்டுகளை தொண்டர்கள் வீசினர்.
வழக்கம் போல் அதில் ஒன்றை எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து விஜய் பேசுகையில், "நான் பேசுறது கேட்கிறதா, அந்த காலத்தில் போருக்கு போறதுக்கு முன்னாடி ஜெயிக்கிறதுக்கு குலதெய்வதம் கோயிலில் சுவாமி கும்பிட்டுத்தான் செல்வார்களாம்.
அது போல் அடுத்த வருடம் தேர்தலில் வெற்றி பெற திருச்சியில் மக்களை கும்பிட வந்திருக்கிறோம். திருச்சியில் தொடங்கிய எல்லாமே திருப்புமுனையாக அமையும் என்பார்கள்.
இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. அண்ணா துரை தேர்தலில் போட்டியிட முடிவு செய்த இடம் திருச்சியில்தான். இது 1956 இல் நடந்தது. அது போல் எம்ஜிஆர் மாநில மாநாட்டை 1975 இல் திருச்சியில்தான் நடத்தினார். திருச்சியில் மலைக்கோட்டை, பெரியாருடைய இடம் உள்ளது.
பெரியாரும் அண்ணாவும் நேசித்த இடம் திருச்சி! நம்ம மக்களாகிய உங்கள் எல்லாரையும் பார்த்துட்டு போக வந்திருக்கிறேன். ஒரு சில மண்ணை தொட்டால் நல்லது என பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். அது போல் திருச்சியில் தொடங்கிய எல்லாமே வெற்றிதான்! இவ்வாறு விஜய் நடந்து கொண்டே பேசி வருகிறார்.
ஆனால் மைக் கோளாறு காரணமாக அவர் பேசியது நிறைய பேருக்கு கேட்கவில்லை. டிவி நேரலைகளிலும் அவரது பேச்சு கேட்காததால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications