திருச்சியை தட்டி தூக்கும் துரை வைகோ? கள நிலவரம் சொல்வது என்ன? பிரகாசிக்குதே தீப்பெட்டி
திருச்சி: லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் திருச்சியில் கள நிலவரம் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு சாதகமாக அங்கே களநிலவரம் உள்ளது.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாட்டில் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நாளை மாலை வரை மட்டுமே பிரச்சாரம் செய்யப்படும் நிலையில் கடைசி கட்ட வீடு வீடான பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. இதுவரை வெளியான தேர்தல் கருத்து கணிப்புகள் பெரும்பாலும் திமுகவிற்கு சாதகமாக வர தொடங்கி உள்ளன.

அந்த வகையில் திமுகவின் கோட்டையான திருச்சியும் அவர்கள் கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவிற்கே சாதகமாக உள்ளது. திருச்சி பொதுவாகவே திமுகவின் கோட்டைதான். அங்கே உள்ள 9 சட்டசபை உறுப்பினர்களும் திமுக உறுப்பினர்கள்.
ஒரே மாவட்டத்தில் கே என் நேரு, அன்பில் மகேஷ் என்று இரண்டு பெரிய அமைச்சர்களும் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மிக வலுவான வேட்பாளராக இந்த தொகுதியில் களமிறங்கி உள்ளார். தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் துரை வைகோவிற்கு சாதகமான சூழல் உருவாவதாகவே நம்மிடம் நேரில் பேசிய அரசியல் விமர்சகர்கள், தேர்தல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கள நிலவரம் எப்படி இருக்கிறது?: துரை வைகோவின் அரசியல் மதிமுகவினரை உற்சாக படுத்தி உள்ளது. வைகோவிற்கு பின் யார் என்ற கேள்விக்கு பதிலாக துரை வைகோ கட்சிக்கு உள்ளே புதிய இளைஞர் ரத்தத்தை பாய்ச்சி இருக்கிறார்.
முக்கியமாக தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது மதிமுகவினரின் தீவிர நோக்கமாக இருந்தது . அதில் துரை வைகோவும் உறுதியாக இருந்தார். திமுக சின்னத்தில் நின்றால் வெற்றி உறுதி என்றாலும் தனி சின்னம் என்பதில் அவர் உறுதியாகவே இருந்து தீப்பெட்டி சின்னத்தை பெற்றார்.
தொடக்கத்தில் பம்பரம் சின்னம் பெறுவதற்கு கோர்ட் வரை கூட சென்று தீவிரமாக மதிமுக முயற்சிகளை மேற்கொண்டது. கடைசியில் பம்பரம் கிடைக்கவில்லை என்றாலும் தீப்பெட்டி போன்ற கவனம் பெறக்கூடிய தனி சின்னம் கிடைத்தவுடன் மதிமுக இங்கே களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்ய தொடங்கியது.
இங்கே துரை வைகோ மேற்கொண்ட மிக முக்கியமான பிரச்சாரம் என்றால் 1. சின்னத்தை கொண்டு செல்ல திமுக + மதிமுக நிர்வாகிகளை களமிறங்கியது. அவர்கள் சூறாவளியாக தீப்பெட்டி சின்னத்தை கொண்டு சென்றது. 2. கூட்டணி கட்சி தலைவர்களை மொத்தமாக அனுசரித்து பலரையும் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கி மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் வரை நேரடியாக களமிறங்கி துரை வைகோவிற்கு பிரச்சாரம் செய்தனர்.
இவர்களை பிரச்சார களத்திற்கு கொண்டு வந்தது துரை வைகோவிற்கு சாதகமாக மாறி உள்ளது. இது போக திருச்சியில் திமுகவின் அடையாளங்களான அன்பில் மகேஷ், கே என் நேரு இருவரும் இடைவிடாமல் இவருக்காக பிரச்சாரம் செய்தது துரைக்கு தற்போது வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.
என்ன கூறினார்கள்: இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருச்சி நிர்வாகிகள் சிலர், திருச்சி திமுக கூட்டணியே நினைத்தாலும் தோல்வி அடைய முடியாத தொகுதி. அந்த அளவிற்கு வலிமையாக இருக்கிறது.
இங்கே துரை வைகோ பிரச்சாரம் சிறப்பாக உள்ளது. பெரிதாக மீடியாவில் பேசாமல், நேரடியாக மக்களிடம் களத்தில் பேசி பிரச்சாரம் செய்கின்றனர். அன்பில் மகேஷ், கே என் நேரு அமைச்சர்களும் இங்கே களமிறங்கி உள்ளதால் திருச்சியில் துரை வைகோ வெற்றி உறுதிதான் என்கின்றனர்.
அதோடு, தீப்பெட்டி சின்னத்தை குறைந்த காலத்தில் மதிமுக நிர்வாகிகள் பிரபலப்படுத்திவிட்டனர். திருச்சியில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், பாஜக ஆட்சி வரும் போது என்ன சொன்னாங்க.. சிலிண்டர் வாங்கும்போது பேங்கில் பணம் வரும் என்று சொன்னாங்க.. ஆனால் வந்ததா?.. சிலிண்டர் விலை என்ன?.. கணக்கு பாருங்க.. உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போது லாபத்திற்கு விற்ற அரசு அங்கே அமர்ந்திருந்தது. அதை விமர்சிக்க வேண்டியது நம் கடமை. நியாபக படுத்துவதற்காக தான் நான் இங்கே வந்திருக்கிறேன், என்று பேசி இருந்தார்.
அந்த பிரச்சாரம் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. கமலின் இந்த பிரச்சாரம் தொடங்கி அமைச்சர்கள் பிரச்சாரம் வரை எல்லாம் துரை வைகோவின் வெற்றியை கிட்டத்தட்ட திருச்சியில் உறுதி செய்துவிட்டது என்கின்றனர் களத்தில் பணிகளை கவனிக்கும் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications