60-ஐ எட்டும் டிடிவி தினகரன்.. அரசியலுக்கு நடுவே மனைவி, மகளோடு திருக்கடையூர் கோவிலில் சிறப்பு பூஜை!
மயிலாடுதுறை : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது 60வது பிறந்தநாளையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் உக்ர ரத சாந்தி ஹோமம் செய்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
டிடிவி தினகரன் தனது மனைவி, மகளோடு இன்று திருக்கடையூர் கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனம், அமமுக மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலில், சிறப்பான வியூகம் அமைத்துச் செயல்பட்டு தனது வலிமையை உறுதி செய்யும் முடிவோடு, அரசியல் களத்தில் பணியாற்றி வருகிறார் டிடிவி தினகரன்.
பாஜக - அதிமுக கூட்டணியில் இணைவது தொடர்பாக தினகரன் பேசி வந்த நிலையில், கூட்டணியில் அமமுகவுக்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியதால், அவரை கடுமையாக விமர்சித்தார் தினகரன். இந்நிலையில் தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.

பாடல் பெற்ற தலம்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலம். பக்தர் மார்க்கண்டேயனுக்காக, கால சம்ஹார மூர்த்தியாக அவதாரம் எடுத்து எமனை வதம் செய்து மீண்டும் உயிர்பிக்கச் செய்த ஆலயம் என்பதால் இங்கு வருடம் முழுவதும் பூரண ஆயுளுடன் சுபிட்சமாக வாழ ஹோமங்கள் மற்றும் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.

தினகரன் குடும்பத்தினரோடு
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு நட்சத்திர ரீதியாக 59 வயது முடிந்து இன்று 60வது வயது தொடங்குகிறது. இதையொட்டி, சிறப்பு பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு, டிடிவி தினகரன் தனது குடும்பத்தினருடன் வந்தார். மனைவி அனுராதா, மகள் ஜெயஹரணி உள்ளிட்டோருடன் இந்தக் கோவிலுக்கு வந்துள்ளார் டிடிவி தினகரன். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறப்பு பூஜைகள்
டிடிவி தினகரன், திருக்கடையூர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெற்ற உக்ர ரத சாந்தி ஹோமத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து கோபுர கலசங்களில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் டிடிவி தினகரன் தம்பதியினருக்கு தெளிக்கப்பட்டு கலசபிஷேகம் செய்யப்பட்டது.

தருமபுரம் ஆதின மடம்
பின்னர் டிடிவி தினகரன் - அனுராதா தம்பதி இருவரும் மாலை மாற்றிக் கொண்டு அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தனர். பின்னர், டிடிவி தினகரன் குடும்பத்தினரோடு தருமபுரம் ஆதீன மடத்திற்குச் சென்று ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியாரிடம் ஆசி பெற்றார்.












Click it and Unblock the Notifications