புகார் சொல்லி பணம் கேட்கும் அண்ணாமலை.. என்ன அண்ணாச்சி இப்டி பேசுறீக.. பாஜக நிர்வாகியிடம் சீறிய மாஜி!
பாஜக நிர்வாகியிடம் போனில் கோபமாகப் பேசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்
தூத்துக்குடி : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் கடுமையாகப் பேசிய நிலையில், அதுபற்றி தொடர்பு கொண்டு கேட்ட பாஜக நிர்வாகியிடம் கோபத்தைக் காட்டியுள்ளார் அதிமுக மாஜி அமைச்சர்.
அதிமுக - பாஜக இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில், தூத்துக்குடியில், மாஜி அமைச்சர், பாஜக நிர்வாகியிடம் போனில் பேசிய ஆடியோ பரவி வருகிறது.
பாஜக, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி பாஜக நிர்வாகியிடம் சீறியுள்ளார் சண்முகநாதன்.

கூட்டணிக்குள் புகைச்சல்
தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளாக இருந்து வரும் நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே சில நாட்களாக தொடர்ந்து கருத்து மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி, அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்த நிலையில், இரண்டு கட்சி நிர்வாகிகளும் மாறி மாறி கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனால், கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டது.

பதற்றத்தைத் தணிக்க
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், பதற்றத்தைத் தணிக்க எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்களிடம், பாஜகவையும், அண்ணாமலையும் விமர்சிக்க வேண்டாம் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, டெல்லி தலைமையும், தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளிடம், அதிமுக விவகாரத்தில் அமைதி காக்க அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் அண்ணாமலையை விமர்சித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பணம் கேட்கத்தான் அண்ணாமலை புகார்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், திமுக அமைச்சர்கள் மீது அண்ணாமலை முறைகேடு புகார் அளித்தது, புகார் விசாரணைக்கு வந்ததும் எனக்கு இவ்வளவு பணம் கொடு என்று பணம் கேட்பதற்காகத்தான் என பொதுமக்கள் பேசிவருவதாகத் தெரிவித்தார்.

பாஜகவுக்கு டெபாசிட் காலி
மேலும், தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் போட்டி எப்போதுமே திமுக- அதிமுக இடையே தான் இருக்கும், ஸ்டாலினா எடப்பாடி பழனிசாமியா என்பதுதான் போட்டியாக இருக்கும், பாஜக தனித்துப் போட்டியிட்டால் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க நேரிடும் என்றும், அதிமுக ஆட்சியில் வருமான வரித்துறையை வைத்து அமைச்சர்கள் அறைக்கே சென்று சோதனை போட்ட மத்திய அரசு இப்போது அதைச் செய்யவில்லை, அப்படியென்றால் இரு கட்சிகளும் கள்ள கூட்டணியா என விமர்சித்துப் பேசினார்.

பாஜக நிர்வாகி - அமைச்சர் பேச்சு ஆடியோ
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜகவின் எட்டயபுரம் மண்டலச் செயலாளர் காளிராஜ், முன்னாள் அமைச்சர் சண்முகநாதனை தொடர்பு கொண்டு இதுகுறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார். அதற்கு, சண்முகநாதன் அவரிடமும் சீற்றத்தோடு பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வெளியாகி பரவி வருகிறது.

மாஜி காட்டம்
அந்த ஆடியோவில், பாஜக நிர்வாகி பாஜக பற்றி ஏன் அண்ணாச்சி இப்படி பேசுகிறீங்க எனக் கேட்டதற்கு, நீ பாஜகவா இரு.. எந்த பயலா வேணும்னாலும் இரு.. அது பற்றி எனக்கு கவலை இல்லை என கோபமாக பதிலளித்துள்ளார். மேலும், அதிமுக என்றால் என்ன என்றும், அதிமுகவை யார் வழி நடத்துகிறார்கள் என்றும் பாஜகவினருக்கு தெரியாது. நீங்கள் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என பேசிக்கொண்டிருக்கிறீர்கள். ஈபிஎஸ்க்கு தான் அதிமுகவில் உள்ள நிர்வாகிகளின் முழு ஆதரவு இருக்கிறது. இது தெரியாமல் பாஜகவினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் எல்லாம் எங்களிடம் வேண்டாம் என என சண்முகநாதன் காட்டமாகப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications