“என்ன.. ஓனர் வரணுமா?” டொனேஷன் கேட்டு மிரட்டிய பாஜக மாநில நிர்வாகி கைது! சொகுசு கார்கள் பறிமுதல்!
நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி : நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலவன் புதுக்குளம் பகுதியில் தனியார் கிரஷர் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு நேற்று மாலை பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதி ராஜா உள்ளிட்டோர் சென்று நன்கொடை கேட்டுள்ளனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த மேலாளர், கிரஷர் ஆலை நிறுவனர் தற்போது இல்லாததால் பிறகு வருமாறு பூபதியிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த பூபதி உள்ளிட்ட பாஜகவினர், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் கிரஷர் ஆலை முன்பாக தங்களது சொகுசு கார்களை நிறுத்தி அங்கு வரும் லாரிகளை வழிமறித்துள்ளனர். இதையடுத்து பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதி மீது கிரஷர் ஆலை நிர்வாகத்தினர் புகார் அளித்தனர்.
அவர்களின் புகாரின் பேரில் விசாரணை நடத்திய சாத்தான்குளம் போலீசார், பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதியை கைது செய்ததோடு, அவர்கள் லாரிகளுக்கு குறுக்கே நிறுத்திய சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்சிக்கு நன்கொடை கேட்டுச் சென்று அடாவடியில் ஈடுபட்ட பாஜக மாநில நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications