மஞ்சள் கலரில் கொழ கொழன்னு..மிரண்டு போன க்யூ பிராஞ்ச்! 28 கோடி மதிப்பாமே..அமல்ராஜை அமுக்கிய போலீஸ்
தூத்துக்குடி: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் பிடிபட்ட நிலையில், தற்போது தூத்துக்குடியில் "சாரஸ்" என்ற போதைப் பொருள் பிடிபட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பெரிய அளவில் போதைப் பொருட்கள் பிடிபட்ட நிலையில், திமுக பிரமுகரும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போதைப் பொருட்களை சென்னைக்கு கடத்தி வந்து அங்கிருந்து தூத்துக்குடி, இராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்துவதாக தகவல் கிடைத்த நிலையில், இந்த மூன்று பகுதிகளிலும், வருவாய் புலனாய்வு அதிகாரிகள், போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர், தமிழக போலீசார், கடலோர காவல் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தப்படவிருந்து நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த பைசூல் ரஹ்மான், இப்ராஹிம் மற்றும் மன்சூர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதே போல் கடந்த வாரம், சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
அந்த சோதனையில் சுமார் 50 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 கிலோ 130 கிராம் எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்படியாக தமிழகத்தை மையமாக வைத்து போதைப் பொருள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதோடு, இளைஞர்களிடையே பழக்கமும் அதிகரித்துள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் தற்போது தூத்துக்குடியில் "சாரஸ்" என்ற போதைப் பொருள் பிடிபட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக க்யூ பிரான்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து கடலோர பகுதிகளில் அப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் சிலர் சந்தேகமான முறையில் நின்று கொண்டிருந்த நிலையில் அவர்கள் படகுக்காக காத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மஞ்சள் நிறத்தில் பால்கோவா போல அந்த பொருள் இருந்த நிலையில் அது குறித்து விசாரித்த போது அது கஞ்சா செடியில் இருந்து தயாரிக்கப்படும் சாரஸ் என்ற போதை பொருள் என்பது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 56 கிலோ எடையுள்ள சாரஸ் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 28 கோடி இருக்கும் என்பது தெரிய வந்தது. கடத்தல் தொடர்பாக வழக்கறிஞரான அமல்ராஜ், சுனாமி கலாணியைச் சேர்ந்த நிஷாந்தன், கோயில் பிள்ளை விளையைச் சேர்ந்த இன்ஃபெண்ட் விக்டர் ஆகியோரை கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து சாரஸை கடத்தி வந்து சென்னை வழியாக தூத்துக்குடிக்கு வந்து, இங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications