“விஜய்க்கு ஓர் ஆபத்து வந்தால் அது அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவால் தான்” - ஆர்.எஸ்.பாரதி வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: "விஜய்க்கு ஒரு ஆபத்து வரப்போகிறது என்றால் அது ஆதவ் அர்ஜுனாவால் தான் வரப்போகிறது. பத்து நாட்களாக அவர் வாய் திறக்கவில்லை.. ஏதோ நடக்கிறது" என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், திமுக - தவெக இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, மார்க்கண்டேயன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

RS Bharathi

இந்தக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "தவெக ஆட்சி நீண்ட நாளைக்கு நீடிக்காது. நாம் போக வைக்க வேண்டாம். ஆதவ் அர்ஜுனா ஒருவர் போதும். புதிதாக திறக்கப்படும் ஹோட்டலுக்கு சென்று ருசி பார்ப்பது போல அரசியலில் ஒவ்வொரு கட்சிக்கும் சென்று பார்த்துவிட்டு வருபவர்தான் ஆதவ் அர்ஜுனா.

அவர் திமுகவில் கொஞ்ச நாள் குப்பை கொட்டினார். பின்னர் போன பிறகுதான் அவர் கொட்டும் தேள் என்று தெரிந்தது. கொட்டுற தேளை வெட்டும் சக்தி திமுகவிற்கு உண்டு. எம்.பி சீட் கிடைக்கும் என்று பார்த்தார். சீட் கிடைக்கவில்லை என்றதும் விசிக சென்றார். இப்போது தவெகவில் இருக்கிறார்.

விஜய்க்கு ஒரு ஆபத்து வரப்போகிறது என்றால், அது ஆதவ் அர்ஜுனாவால் தான் வரப் போகிறது. பத்து நாட்களாக அவர் வாய் திறக்கவில்லை என்றால் ஏதோ நடக்கிறது. ஏனெனில் கேரளாவில் அவரது குடும்பத்தின் மீது வழக்கு இருக்கிறது. 924 கோடி ரூபாய் லாட்டரி மோசடி செய்ததாக ஆதவ் அர்ஜுனா மனைவி, அவரது மாமியார், அவரது குடும்பத்தினர் மீது வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோன்று பல அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறது. அவையெல்லாம் தூசி தட்டப்படும்போது நல்ல காலம் வரும்" என்றார்.

மேலும் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "ராஜாஜி தமிழக முதல்வராக இருந்தபோது திமுகவை மூட்டைப்பூச்சியைப் போல் நசுக்குவேன் என்றார். அவருக்கு நினைவு மண்டபம் எழுப்பியது திமுக தான். அதே போன்று, திமுக காரன் கைவிரலை வெட்ட வேண்டும் என்று காமராஜர் பேசினார், அவருக்கு சிலை வைத்து அழகு பார்த்தது திமுக தான். அந்த காமராஜரால் அழிக்க முடியாத திமுகவை நேற்று பெய்த மழையில், இன்று முளைத்த காளான் தொட்டுப் பார்க்கிறதா?

தவெகவை தாவல் கட்சி என்று அழைக்கலாம். எல்லா கட்சிகளிலிருந்தும் தாவித்தாவி அக்கட்சியில் இணைகிறார்கள். இரண்டு மாத கால ஆட்சியில் சாதனையை புரிந்துவிட்டார் என்று கூறி கட்சிக்கு போனால் கூட பரவாயில்லை, தேர்வு முடிவு வெளியான அன்றே ரயிலில் துண்டு போட்டு இடம் பிடிப்பது போல் ஆதரவு கொடுத்தனர் காங்கிரஸ் கட்சியினர். இவ்வளவு அயோக்கியத்தனமான அரசியலை தமிழகத்தில் நாம் பார்த்திருக்கிறோமா? இதில் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளோம்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் செய்த துரோகம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. தேர்தல் நேரத்தில் குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக திமுக தலைவர் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். திமுகவுக்கு பல்வேறு சோதனை வந்தபோது அதை தாங்கி நின்றவர்கள் திமுகவின் தொண்டர்கள். ஒரு தோல்வியினால் திமுக அழிந்துவிட்டது என்று நினைப்பவர்கள் முட்டாள்கள்" என்றும் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+