SIR = TVK வெற்றி? ஏன் ஞானேஷ் குமாருக்கு எதிராக விஜய் வாய் திறக்கவில்லை? இடிக்குதே!
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கும் (SIR), தவெகவின் தேர்தல் வெற்றிக்கும் தொடர்பு இருப்பதாக 'தி இந்து பிசினஸ் லைன்' இதழ் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. இதை தவெகவினர் மறுத்தாலும், இப்போது வரை ஏன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பற்றி பெரிய அளவில் முதலமைச்சர் விஜய் வாய் திறக்கவில்லை? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
வயதான மூத்த குடிமக்களுக்கும், வயசுக்கு வந்த இளம் வாக்காளர்களுக்கும் வாய்க்கரிசி போட்ட கதைதான் இந்த SIR என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இப்படி இருக்கையில் 'தி இந்து பிசினஸ் லைன்' வெளியிட்டிருக்கும் டேட்டா.. தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது SIR நடவடிக்கை மூலமாக எந்தெந்த தொகுதிகளில் அதிக அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் தவெக பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருக்கிறது என்று புள்ளிவிவரங்களோடு 'தி இந்து பிசினஸ் லைன்' கூறியிருக்கிறது.
10,000க்கும் குறைவாக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை மொத்தம் 19. இதில் தவெக 2, திமுக 7, அதிமுக 6 தொகுதிகளில் வெற்றிப்பெற்றிருக்கின்றன. ஆனால் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மாறும்போது.. வெற்றி நிலவரம் அப்படியே தலைக்கீழாக மாறுகிறது.
10,000 - 20,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை மொத்தம் 80. இதில் தவெக 22, திமுக 20, அதிமுக 24 இடங்களில் ஜெயித்திருக்கின்றன. இங்கு போட்டி சமமாகத்தான் இருக்கிறது.
20,000 - 30,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை மொத்தம் 66. இதில் தவெக 32 தொகுதிகளில் ஜெயித்து ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. திமுக 21, அதிமுக 11 இடங்களில் வெற்றிப்பெற்றிருக்கின்றன.
30,000 - 50,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை மொத்தம் 37. இங்கு வெற்றிக்கணக்கு மொத்தமாக தலைகீழாக மாறியிருக்கிறது. தவெக 24, திமுக 8, அதிமுக 5 இடங்களில் வெற்றிப்பெற்றிருக்கின்றன.
50,000 - 80,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை மொத்தம் 22. இங்கு தவெக 18, திமுக 3, அதிமுக 1 இடங்களில் வெற்றிப்பெற்றிருக்கின்றன.
80,000க்கும் அதிகமான வாக்காளர் நீக்கப்பட்ட தொகுதிகள் என்று கணக்கெடுத்தால் 10 வருகின்றன. இந்த 10 தொகுதிகளிலும் தவெகதான் முழுமையாக வெற்றிப்பெற்றிருக்கிறது. 'தி இந்து பிசினஸ் லைன்' நடத்திய தரவு பகுப்பாய்வில் இந்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஆனால் இந்த விஷயத்தில் சில கேள்விகள் எழுகின்றன. ஒரு தொகுதியில் வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்கள் என்றால்.. அவர்கள் அனைவரும் எப்படி ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களாக மட்டுமே இருப்பார்கள்? அதாவது அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதியில் திமுக தோல்வியடைந்திருக்கிறது எனில்.. நீக்கப்பட்ட அனைவரும் எப்படி திமுக ஆதரவாளர்களாக இருப்பார்கள்? இதெற்கெல்லாம் சாத்தியமே இல்லை என்று தவெகவினர் கூறுகின்றனர்.
"இந்த டேட்டா எங்கள் வெற்றியுடன் பொருந்தி போவது என்பது.. தற்செயலாக நடந்ததுதானே தவிர உண்மை கிடையாது. மக்கள் திமுக மற்றும் அதிமுகவின் தலைமை மீது நம்பிக்கை இழந்ததல் தவெகவுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்திருக்கிறார்கள்" என்று தவெக ஊடக தொடர்பாளர் விவேக் கணநாதன் தெரிவித்திருக்கிறார்.
சரி இவர் சொல்வதை ஏற்றுக்கொண்டால், SIR விஷயத்தில் வேறு சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமை தேர்தல் ஆணையரை நீக்க கோரி பல்வேறு ஜனநாயக அமைப்புகள் போராட்டங்களை நடத்துகின்றன. அதில் ஏன் தவெக பங்கெடுக்கவில்லை? முதலமைச்சர் ஏன் இந்த விஷயம் குறித்து பெரியதாக எதையும் பேசவில்லை? என்று கேள்விகள் எழுகின்றன. இதை வைத்து பார்க்கும்போது எங்கோ இடிக்கிறதே! ஒருவேளை SIR நடவடிக்கை தான் தவெக ஆட்சிக்கு வர காரணம் என்பதால்.. விஜய் வாய் திறக்காமல் இருக்கிறாரா? என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
