“தேடப்படும் குற்றவாளி முதல்வர் விஜய்யுடன் இருந்தது போலீஸ் கண்ணுக்கு தெரியலையா?” ஆர்.எஸ்.பாரதி கேள்வி
சென்னை: "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு போடும் காவல்துறையின் கண்களுக்கு, மாட்டு வண்டியில் முதலமைச்சர் விஜய்யுடன் இருந்த தேடப்படும் குற்றவாளி தெரியவில்லையா?" என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் நேற்று தாராபுரத்தில் ரோடு ஷோ சென்றபோது மாட்டு வண்டியில் பயணித்து வாக்கு சேகரித்தார். அப்போது, மாட்டு வண்டியில் முதலமைச்சர் விஜய்யுடன் பயணித்தது தேடப்படும் குற்றவாளியான அசோக் என எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தாராபுரத்திற்கு இரண்டாவது முறையாக முதலமைச்சர் விஜய், தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தார். கடந்த காலங்களில் வராத முதலமைச்சர் விஜய், தாராபுரத்தில் இரண்டு முறை தேர்தல் பிரச்சாரம் செய்ய காரணம் என்ன? தேர்தல் தோல்வி பயத்தால் முதலமைச்சர் விஜய், வீதி வீதியாகச் சென்றுள்ளார். டீ குடிப்பது, டிராக்டர் ஓட்டுவது என அவர் விளம்பரத்தைத் தேடித் கொண்டிருக்கிறார்.
தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய், மாட்டு வண்டியில் பயணம் செய்தார். அப்போது அவருடன் இருந்தது யார்? அசோக் என்பவர்தான் மாட்டு வண்டியை ஓட்டியுள்ளார். அவர் தவெகவினரால் புகார் கொடுக்கப்பட்டுள்ள ஒரு தேடப்படும் குற்றவாளி. இது காவல்துறையினருக்கு தெரியாதா? அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் நாம் பார்த்திருக்கிறோம், உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்த நீங்கள், தேடப்படும் குற்றவாளி முதலமைச்சர் உடன் தான் இருக்கிறார், அவர் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?
அமைச்சர் கீர்த்தனா பள்ளிக்கூடக் குழந்தைகளைப் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்திருக்கிறார், அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? எதற்காக அவசர அவசரமாக வழக்கு போடுகிறீர்கள்? கடந்த நான்கு மாதங்களாக இந்த அரசு மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு பேசி வாங்கி இருக்கின்றனர். ஆனால் திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரைக் கூட அவர்களால் தொட்டு பார்க்க முடியவில்லை.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களைத்தான் பறிக்க முடியவில்லை. அவைத் தலைவர் வீட்டில் இருக்கின்ற முருங்கைக்காயையாவது பறிக்கலாம் என்றுதான் பறித்து இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டனை விஜய்யாலும், சட்டத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவினர் மீதும், எங்கள் தலைவரின் மீதும், உதயநிதி மீதும் அவசர அவசரமாக வழக்குப் போடும் நீங்கள் இவர்கள் மீது ஏன் வழக்கு போடவில்லை? திமுக வழக்கைப் பற்றி எப்போதும் கவலைப்படாது. ஆனால் இதில் நியாயம் இருக்க வேண்டும், அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி அவர்தான் வண்டி ஓட்டுகிறார். அவருக்கு அருகில் முதலமைச்சர் நின்று கொண்டு வருகிறார். அப்படியென்றால் முதலமைச்சரே குற்றவாளியைக் காப்பாற்றுகிறாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications
