விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்.. நாங்க இப்படில்லாம் பண்ணலயே.. அதிமுக மாஜி கடம்பூர் ராஜூ பரபர!
தூத்துக்குடி: விஜய்யை பார்த்து திமுக பயப்படுகிறது, அவரது படத்திற்கு சிறப்புக் காட்சி வெளியிடுவதில் பாரபட்சம் பார்க்கப்படுகிறது என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டியே தனது விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்திற்கான அணிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ச்சியாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தினர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் 'லியோ' திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாகவே ரத்து செய்யப்பட்டதாக விஜய் ரசிகர்கள் தமிழக அரசை விமர்சித்தனர். அதனைத் தொடர்ந்து லியோ சிறப்புக் காட்சிகள் திரையிடுவதிலும் சிக்கல் எழுந்தது.
பின்னர், 'லியோ' சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முதல் காட்சியை 9 மணிக்கு மேல் தான் திரையிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிறப்பு காட்சி விதிமுறைகளை மீறும் தியேட்டர்களை கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் கொடி காத்த குமரனின் 120வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாமை அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய கடம்பூர் ராஜூ, "விஜய்யை பார்த்து திராவிட முன்னேற்ற கழகம் பயப்படுகிறது. சினிமாவில் எந்த நடிகர்களாக இருந்தாலும் அரசு ஏற்றத்தாழ்வுகளை பார்க்க கூடாது. கடந்த அதிமுக ஆட்சியில் பண்டிகை காலங்களில், முன்னணி நடிகர்களின் படம் வரும்போது எந்த பாரபட்சமும் பார்க்காமல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுத்திருந்தோம்.
ஆனால் தற்போது குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது
சரியல்ல. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் திரைப்படங்கள் பாரபட்சமில்லாமல் திரையிடப்பட்டது. ஆனால் தற்போது 200க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படாத சூழ்நிலையில் தான் உள்ளது. திரைத்துறையே முடங்கி இருப்பதாக எங்களைச் சந்திக்கும் சினிமா துறையினர் கூறுகின்றனர். இதற்குக் காரணம் ரெட் ஜெயன்ட் என்ற நிறுவனத்தின் தனி ஆதிக்கம் தான்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications