15 நாட்கள் திடீர் மருத்துவ விடுப்பில் சென்றார் சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெண்ணிலா 15 நாட்கள் திடீர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இந்த தகவலை சுகாதாரத் துறை இணை இயக்குநர் பொன் இசக்கி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19-ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவொரு விசாரணைக் கைதியும் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர் உடற்தகுதி சோதனை நடத்தப்படுவது வழக்கம். அது போல் ஜெயராஜும், பென்னிக்ஸும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைப்பதற்கு முன்னர் உடற்தகுதி சோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களை சிறையில் அடைக்கலாம் என சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா உடற்தகுதி சான்றிதழ் வழங்கினார். இந்த நிலையில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து சிறையில் மரணமடைந்தனர். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரணை நடத்துகிறது.
இந்த நிலையில் இருவரின் பிரேதப் பரிசோதனையில் அதிக காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸை சிறையில் அடைக்க உடல்தகுதி சான்று அளித்த வெண்ணிலா, தற்போது 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இந்த தகவலை சுகாதாரத் துறை இணை இயக்குநர் பொன் இசக்கி தெரிவித்தார். ஜெயராஜும், பென்னிக்ஸும் இறந்த போது 4 நாட்களில் விடுப்பில் சென்றவர் வெண்ணிலா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications