‛விஜய்’ பட ஸ்டைல்.. தேர்வை நிறுத்த மாணவியின் பகீர் திட்டம்.. வேலூரில் அரண்ட போலீஸ்! நடந்தது இதுதான்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் பாணியில் வேலூரில் 9 ம் வகுப்பு மாணவியின் போன் கால் சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அலுவலகம் மட்டுமின்றி வேலூர் போலீசாருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
வேலூர்: வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படத்தின் பாணியில் பரீட்சையை நிறுத்த 9ம் வகுப்பு மாணவி செய்தி காரியம் போலீசாரை அதிர வைத்து பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
சென்னையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இந்நிலையில் தான் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது. தினமும் இங்கு ஏராளமான புகார்களை மக்கள் அளித்து வருகின்றனர். மேலும் உதவிகளையும் மக்கள் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் தான் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன்கால் வந்தது. அந்த போன் கால் சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அலுவலகம் மட்டுமின்றி வேலூர் போலீசாருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக..
அதாவது போனில் பேசியவர், ‛‛வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கழிஞ்சூரில் உள்ள ஜெயின் பள்ளியில் வெடிகுண்டு உள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்து சிதறும்'' எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து வேலூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது.

அதிரடி சோதனை
இதையடுத்து வேலூர் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிக்கு சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லாததும், போனில் வந்த தகவல் வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. இதனால் போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகம் நிம்மதியடைந்தனர்.

போலீஸ் விசாரணை
மேலும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பின் எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது வேலூர் தெற்கு போலீஸ் எல்லைக்குட்பட்ட பழைய டவுன் வள்ளலார் தெருவில் பாட்டி ஒருவரின் செல்போனில் இருந்து அழைப்பு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் போன் செய்யவில்லை என்பது தெரியவந்தது.

சிக்கிய மாணவி
மேலும் வீட்டில் இருந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது நிரம்பிய மாணவியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது தவறை ஒப்புக்கொண்டார். அதாவது இன்று பள்ளியில் புவியியல் தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும், அவர் சரியாக படிக்காத நிலையில் பரீட்சையை நிறுத்த வெடிகுண்டு இருப்பதாக பாட்டியின் செல்போனில் இருந்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து விட்டனர்.

நடிகர் விஜய் பட ஸ்டைல்
தமிழ் திரைப்படமான எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் கல்லூரியில் தேர்வு நடக்க இருக்கும். ஆனால் ஷில்பா ஷெட்டி தேர்வுக்கு படித்திருக்கமாட்டார். இதையடுத்து தேர்வை நிறுத்த ஷில்பா ஷெட்டி விரும்புவார். இதற்கு உதவுததாக விஜய் கூறுவார். மேலும் கல்லூரியில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரப்பப்படும் வகையில் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் வேலூரில் பள்ளி தேர்வுக்கு பயந்து 9ம் வகுப்பு மாணவி வெடிகுண்டு இருப்பதாக போன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications