துரை தயாநிதி எப்படி இருக்கிறார்? வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் 4 மாதம் கழித்து நடந்த அந்த மாற்றம்
வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல் நிலை குறித்தும் அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆகிறார் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி கடந்த டிசம்பர் மாதம் முதல் 4 மாதங்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த மே மாதம் முதல் 4 மாதங்களாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதாவது 100 நாட்களுக்கு மேல் சிஎம்சி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறும் அளவுக்கு என்ன நடந்தது என்பதுதான் மு.க.அழகிரியின் ஆதரவாளர்களின் கவலையாக இருந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனை வளாக நல்ல செய்தியை சொல்லியுள்ளது.
கடந்த 4 மாதங்களாக துரை தயாநிதிக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது கை, கால்கள் நன்றாகவே இயக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் திமுகவினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி திரைத் துறையில் பல படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வீட்டில் அவர் கால் தவறி விழுந்த போது தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதாக அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கேயே 4 மாதங்கள் சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் 4 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அது போல் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சைகள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. அவரை முதல்வர் ஸ்டாலின் இருமுறை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. மதுரை என்றாலே அது அழகிரிதான். அந்த அளவுக்கு மதுரையை அவருடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் திமுகவில் யாருக்கு முக்கியத்துவம் என்ற பிரச்சினையில் ஏற்பட்ட மோதலால் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால் கடந்த 2014 ஆம் ஆண்டு அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை கட்சியில் இணைக்க குடும்பத்தினர் எத்தனையோ முயற்சிகளை எடுக்க போதிலும் அது பலனளிக்கவில்லை. இந்த நிலையில் முதல்வராக ஸ்டாலின் தேர்வான போது அழகிரி அவருக்கு டிவிட்டரில் வாழ்த்து சொன்னார். அது போல் ஸ்டாலினும் தனது பதவியேற்பு விழாவுக்கு மு.க.அழகிரி குடும்பத்தினரை அழைத்த நிலையில் மகன் துரையும் மகள் கயல்விழியும் வந்திருந்தனர். அவர்களை உதயநிதியும் துர்காவும் வாரி அணைத்துக் கொண்டனர். இந்த நிலையில் அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்று மதுரைக்கு சென்ற போது தனது பெரியப்பா, பெரியம்மாவை சந்தித்து ஆசி வாங்கினார். விரைவில் துரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால் அவரை முதல்வர் ஸ்டாலினும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் நேரில் சந்திக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications