மகளிர் உரிமை தொகை.. 'விரைவில் விடுப்பட்ட குடும்ப தலைவிகளுக்கு'.. வருவாய் துறை அதிகாரிகள் குட்நியூஸ்
வேலூர்: தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மாநிலம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். இதில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 975 பேர் பயன்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தத் திட்டத்தில் விடுபட்ட தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு விரைவில் உரிமைத்தொகை கிடைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தேர்தலுக்கு முன்பே அளித்த வாக்குறுதிகளில் முக்கியமான வாக்குறுதிதான்மகளிர் உரிமை தொகை.மகளிரின் வங்கி கணக்கில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படியே ஆட்சிக் வந்த பின்னர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டம் அனைத்து மகளிருக்கும் இல்லாமல் ஏழைகளுக்கு மட்டுமே செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஆண்டிற்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பத்தினருக்கும், வருமானவரி கணக்கு தாக்கல் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள், சொந்த பயன்பாட்டிற்கு 4 சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட் மின்சாரம் அதிகமாக பயன்படுத்தும் குடும்பத்தினருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படவில்லை.
அதேநேரம் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி, ஆரம்பகட்டத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில் ஆவ ணங்கள் சரிபார்க்கப்பட்டு தொடர்ந்து பயனாளர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.
சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பயனாளர்கள் இணைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டார்கள். அக்டோபர் மாத நிலவரப்படி ஒரு கோடியே 16 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 975 பேர் பயன்பெற்று வருகிறார்கள்...
இதுதொடர்பாக வேலூர் மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் கூறும் போது , வேலூர் மாவட்ட குடும்ப தலைவிகளிடம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த திட்டத்தில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் பலருக்கு உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்றும் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது என்று குற்றச்சாட்டு எழுந்தது.
அதைத் தொடர்ந்து நாங்கள் அரசின் உத்தரவுப்படி பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தினோம். அதில் விடுபட்ட நபர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை அணைக்கட்டு தாலுகாவில் 32,023 பேர், வேலூர் தாலுகாவில் 54,320 பேர், குடியாத்தம் தாலுகாவில் 41,188 பேர், காட்பாடி தாலுகாவில் 30,325 பேர், கே.வி.குப்பம் தாலுகாவில் 14,360, பேரணாம்பட்டு தாலுகாவில் 22,759 பேர் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக வேலூர் மாவட்டத்தில் 1 லட்சத்துக்கு 94 ஆயிரத்து 975 பேர் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற்று வருகிறார்கள். இந்தத் திட்டத்தில் விடுபட்ட தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு விரைவில் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்கள்,
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த அக்டோபர் 18ம் தேதி சென்றார். அப்போது கிரிவலப்பாதையில் திரண்டிருந்த பெண்கள் அவரிடம் பேசும் போது , கலைஞர் உரிமைத்தொகை இந்த பகுதியில் பெரும்பாலான பெண்களுக்கு கிடைக்கவில்லை என்றனர். அப்போது அவர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பெண்களுக்கும் கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications