புளியங்கண்ணு பொன்னியம்மன் கோயிலில் திடீர் பூஜை.. மொத்தமாக இறங்கிய ராணிப்பேட்டை அதிமுக! இதுக்குதானாம்
வேலூர்: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என்றும் வேண்டி ராணிப்பேட்டை புளியங்கண்ணு பொன்னியம்மன் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜையை நடத்தியிருக்கின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையை வேகப்படுத்தி இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி இரண்டு கட்டங்களாக தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். கடந்த 7ம் தேதி முதல் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கியிருந்தார். மொத்தமாக 7 மாவட்டங்களில் 34 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அதிமுக தொண்டர்களையும், பொதுமக்களையும் எடப்பாடி பழனிசாமி நேரடியாக சந்தித்த ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த சட்டமன்ற தேர்தலில், களத்தில் விஜய் உள்ளே புகுந்திருப்பதால் போட்டி தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் விஜய் அதிமுகவில் இணைவார் என்று பேசப்பட்டு வந்திருந்தது. ஆனால் அதிமுகவு மட்டுமல்ல, பாஜகவுடன் கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடன் தான் கூட்டணி வைக்க மாட்டேன் என்று விஜய் கறாராக கூறிவிட்டார். மறுபுறம் திமுகவை எதிர்ப்பதிலும் விஜய் உறுதியாக இருக்கிறார்.
எனவே வாக்குகள் கணிசமான அளவுக்கு பிரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எப்படியாவது அதிமுகவிற்கான வாக்குகளை ஒன்று திரட்டி தனது பலத்தை நிரூபித்து விட வேண்டும் என்று எடப்பாடியில் பழனிசாமி போராடி வருகிறார்.
அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு எடப்பாடி வந்ததிலிருந்து இதுவரை நடந்த தேர்தலில் ஒன்றில் கூட அவர் தலைமையில் கட்சி வெற்றி பெறவில்லை. இருப்பினும் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் ஓரளவுக்கு கூடியிருக்கிறது. இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தாலும் கூட சட்டமன்ற தேர்தலில் அந்த வாக்குகள் எந்த அளவுக்கு வெற்றிக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எனவே தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களை ஒன்று திரட்டவும் அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை சரி செய்யவும் எடப்பாடி பழனிசாமி தீவிரமான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இப்படி இருக்கையில்தான் ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கன்று பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோயிலில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்று வேண்டி அக்கட்சியின் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டிருக்கிறது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் எம் சுகுமார் குடும்பத்தோடு பங்கேற்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். மட்டுமல்லாது அதிமுக முன்னணி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications