துண்டை இப்பவே விரித்த நடிகர்.. ராணிப்பேட்டையில் முக்கோண இடி! இது அதிமுக, திமுகவின் அரசியல் சதுரங்கம்
வேலூர்: தமிழக அரசியல் எப்போதும் கட்சி மோதல்களால் மட்டுமல்ல, ஒரே கட்சிக்குள், ஒரே கூட்டணிக்குள், ஒரே தொகுதிக்குள் உருவாகும் "அதிகார போட்டி"யாலும் சூடுபிடிப்பது வழக்கம். அந்தவகையில் வரப்போகும் தேர்தலுக்கு இப்போதே திமுக, அதிமுகவுக்குள் சில தொகுதிகளில் அனல் அடிக்க துவங்கிவிட்டது.. அந்தவகையில் உதாரணத்துக்கு ஒருசில தொகுதிகளை மட்டும் இங்கே பார்க்கலாம்.
2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகரும் இந்த பரபரப்பான சூழலில், அந்தந்த உள் அரசியல் தான் பல இடங்களில் வெளிப்படையாக பேசப்பட தொடங்கியுள்ளன. "கூட்டணி பலம் முக்கியம்" என்று கட்சி தலைமைகள் கூறினாலும், கள அரசியலில் ஒவ்வொரு தொகுதியும் தனி யுத்தகளமாக மாறி வருகிறது.

கூட்டணியை வலுப்படுத்த சில தொகுதிகளை தியாகம் செய்ய தயார் என்ற தகவல்கள் வெளியானதிலிருந்தே, மாவட்ட அளவில் தலைவர்களின் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஒரு தொகுதி யாருக்கு
ஒரு தொகுதி யாருக்கு? சொந்த கட்சிக்கா? கூட்டணி கட்சிக்கா? என்ற கேள்வி பல இடங்களில் வெளிப்படையான குழப்பத்தை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, பாரம்பரியமாக வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் தான் அதிக போட்டியை சந்திக்கின்றன.
நடிகர் கருணாஸ் - திருவாடானை
இந்த அரசியல் குழப்பத்தின் சிறந்த உதாரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை தொகுதியை சொல்லலாம். காங்கிரஸ் கட்சியின் கருமாணிக்கம், திமுக கூட்டணியில் சேர விரும்பும் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியும், அதே திருவாடானை தொகுதியையே குறிவைப்பதாக தகவல்கள் கூறுகின்றன.. இதற்கு நடுவில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கருமாணிக்கத்திற்கு போட்டியாக தமிழக காங்கிரஸ் துணை தலைவர் சொர்ணா சேதுராமன் களமிறங்க தயாராக உள்ளாராம்..
சொர்ணா சேதுராமனை பொறுத்தவரை, கடந்த லோக்சபா தேர்தலில் சீட் உறுதியானது.. ஆனால் கடைசி நேரத்தில் அது மிஸ்ஸாகிவிட்டது.. அதனால்தான் இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்க டெல்லி மேலிடம் தயாராக இருப்பதாகவும் பேசப்படுகிறது.
எனினும் நடிகர் கருணாஸ் "திருவாடானையை தந்தால், திமுக உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட தயார்" என்று நூல் விட்டிருப்பது அந்த தொகுதியை முழுமையான அரசியல் களமாக மாற்றியுள்ளது. கூட்டணிக்குள் இருக்கிற கட்சிகளே ஒரே தொகுதிக்கு உரிமை கோரும்போது, இறுதி முடிவு எவ்வளவு சிக்கலானதாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.
ராணிப்பேட்டை - முக்கோண இடி
இதுபோன்ற சிக்கல் அதிமுகவிலும் எழுந்துள்ளது.. வட தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும் கவனிக்கத்தக்க அரசியல் சுழலில் சிக்கியுள்ளது. அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகள் உள்ள இந்த மாவட்டத்தில், அதிமுக, பாமக கூட்டணி உறுதியானதிலிருந்து குழப்பம் அதிகரித்துள்ளது. பாமகவுக்கு 17 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்றும் செய்திகள் கசிந்து வருகின்றன..
கடந்த தேர்தலில் ராணிப்பேட்டையில் தோல்வியடைந்த அதிமுகவின் எஸ்.எம். சுகுமார், தற்போது ஆற்காடு தொகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முக்கியமான மேல்விஷாரம் நகராட்சி வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் காரணமாக, அவர் அங்குள்ள செயல்பாடுகளில் பங்கேற்று வருகிறார். இருப்பினும், விருப்ப மனுவில் ராணிப்பேட்டையைத் தேர்வு செய்ததால், உள்ளூர் அரசியலில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
பாமக அதிமுக = ஆற்காடு தொகுதி
இதற்கிடையில், பாமக தரப்பில் சவுமியா அன்புமணியும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாம்.. அத்துடன் ஆற்காடு தொகுதியையும் பாமக கேட்கிறது என்ற பேச்சு ஓடுகிறது..
அதாவது ராணிப்பேட்டை, ஆற்காடு இரண்டையுமே பாமக கேட்பது போல தெரிகிறது.. ஆனால், அதிமுக தலைமையிடம் இந்த இரண்டு தொகுதிகளையும் கூட்டணிக்கு ஒதுக்குமா, அல்லது சொந்த கட்சிக்காரர்களுக்கு தருமா என்ற கேள்விக்கு இன்னும் விடை இல்லை. இதனால், ராணிப்பேட்டை, ஆற்காடு இரு தொகுதிகளிலும் அதிமுக நிர்வாகிகள் குழப்பத்துடனும் கலக்கத்துடனும் காத்திருக்கிறார்கள்.
முட்டி மோதும் அரசியல்வாதிகள்
இப்படி, தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் யாருக்கு எந்த தொகுதி? என்ற கேள்வி தான் தமிழக அரசியலை சூடுபடுத்தி வருகிறது. கட்சி மோதல்களை விட, தொகுதி அரசியல், தனிநபர் ஆசை, கூட்டணி கணக்குகள் போன்றவைதான் வரப்போகும் தேர்தலின் உண்மையான ஹீரோக்களாக மாறி வருகின்றன. இந்த முட்டிமோதல்கள் இறுதியில் யாருக்கு பலனாக முடியும் என்பது, தேர்தல் அறிவிப்புக்கு பிறகே தெளிவாகும்... பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications