வேலூரில் பணம் தின்னி.. ரூ.1 கோடிக்கு எறும்பு தின்னியை பிசினஸ் பேசிய போலீஸ்.. கடைசியில் செம ட்விஸ்ட்
வேலூர்: வேலூர் மாவட்டத்திலும் எறும்பு தின்னிகள் அழிந்து வரும் நிலையில், அதை போலீசாரே விலைக்கு வாங்குவதற்கு முன்வந்துள்ளனர்.. இதற்காக எறும்பு தின்னிகளை 1 கோடி ரூபாய்க்கு விலைக்கும் பேசியிருக்கிறார்கள்.. கடைசியில் என்னாச்சு தெரியுமா?
உலகளவில் அதிகப்படியாக கடத்தப்படும் ஒரு பாலூட்டி இனம் எதுவென்றால், பாங்கோலின்கள் என்று சொல்லக்கூடிய எறும்பு தின்னிகள்தான்.. எறும்புண்ணி என்றும், அலங்கு என்றும் அழைக்கப்படும் இந்த விலங்கு, பாலூட்டி வகையை சேர்ந்தது. இதை வேட்டையாடுவது, விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

மருத்துவ பலன்கள்: ஆனாலும், மனிதர்களுக்கு பெரிதும் தீங்கு விளைவிக்காத இந்த விலங்கு மனிதர்களால் அதிகம் வேட்டையாடப்படுகிறது.. அதிகம் பிறநாடுகளுக்கு கடத்தப்படுகிறது.. ஏன் தெரியுமா?
உலகில் செதில்களால் பாதுகாக்கப்பட்ட ஒரு பாலூட்டி இனமாக இந்த எறும்பு தின்னிகள் உள்ளன.. இந்த செதில்கள் கெரோட்டீனால் ஆனது... மனிதர்களின் நகங்களில் காணப்படுவது இந்த கெரோட்டீன்கள்தான்.
நமக்குதான் இவை சாதாரண எறும்புத் தின்னி. ஆனால், சர்வதேச சட்டவிரோத சந்தையில், இவைகள்தான் பணம் தின்னி... ஆம், இந்த எறும்பு திண்ணியின் செதில்களிலிருந்து, மருந்துகள் எடுக்கப்படுகின்றன.. ஆண்மைக் குறைவு, புற்று நோய், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதாக சீனாவில் இந்த மருந்தைதான் பயன்படுத்துகிறார்களாம். அந்தவகையில், சீனா, மலேசியா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் எறும்புத்தின்னியின் செதில்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருக்கிறதாம்.
வேட்டையாடுதல்: எறும்புத் தின்னியின் செதில்களில் எந்த நன்மையையும் இல்லை என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொன்னாலும், எறும்பு தின்னிகளை வேட்டையாடுவது பெருமளவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. இது நம்முடைய தமிழகத்திலும் நடக்கிறது.
குற்றாலம் போன்ற பகுதிகளில் தங்கியிருந்து வியாபாரம் செய்யும் பழங்குடியின மக்கள் சிலர், எறும்பு தின்னியின் செதில்களை விற்பனை செய்வதாக செய்திகள் அவ்வப்போது வெளியாகும்.. 2 மாதங்களுக்கு முன்புகூட, திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் பகுதியில் எறும்பு தின்னியை கடத்தி வந்த 8 பேரை வனத்துறையினர் கைது செய்திருந்தனர். ஒரு எறும்பு தின்னியை 20 லட்ச ரூபாய்க்கு பேரம் பேசி, வெளிநாட்டிற்கும் இவர்கள் கடத்த முயன்றது தெரியவந்தது.
ரகசிய தகவல்: அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான எறும்பு தின்னியை வேட்டையாடி விற்க முயன்ற 6 பேர் வேலூர் மாவட்டத்திலும் கைதாகி உள்ளனர்.. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் 6 பேர் கொண்ட கும்பல் இந்த விலங்கை வேட்டையாடி விற்பனை செய்வதாக வேலூர் மாவட்ட வனத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது..
இதனால் போலீசார் வியாபாரிகளை போல வேடமிட்டு, இந்த நபர்களை அணுகி, எறும்பு தின்னியை 1 கோடி ரூபாய்க்கு பேரம் பேசினார்கள்.. இறுதியில், அவர்கள்தான் எறும்பு தின்னியை கடத்துபவர்கள் என்பது உறுதியானதுமே, 6 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இந்த கடத்தலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான திருவண்ணாமலை கீழ்முருங்கை கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் உள்பட 6 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.. அவர்கள் வைத்திருந்த எறும்புத்தின்னி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த விலங்கு மீண்டும் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
ஆதாரங்கள் இல்லை: மருத்துவ பயன்பாடுகள் இருப்பதாக சொல்லி ஏமாற்றி எறும்புத்தின்னியை விற்பனை செய்கின்றனர். ஆனாலும், அதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று நிபுணர்கள் மீண்டும் கூறுகிறார்கள். உலகில் அழிவின் விளிம்பில் இருக்கும் அரிய வகை உயிரினங்களில் ஒன்றாக எறும்புத்தின்னி உள்ள நிலையில், அவைகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருவது, சமூக ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய கவலையை உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications