வேலூரை உலுக்கிய பெண் மருத்துவர் பலாத்கார வழக்கு.. குற்றவாளி சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
வேலூர்: வேலூரில் கடந்த 2022ஆம் ஆண்டு பெண் மருத்துவர் ஒருவர் இரவு நேரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 23 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் ஒருவரும் இரவு காட்சி முடிந்து இரவு 12.30 மணிக்கு மேல் 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர்.

இவர்களை நோட்டமிட்ட 4 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்து ஆட்டோவுக்காக காத்திருந்த 2 பேரிடம் எங்கே செல்ல வேண்டும் என கேட்டு இது சேர் ஆட்டோ தான் ஏறுங்க என கூறியுள்ளனர். ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார்.
அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். ஏற்கனவே ஆட்டோவில் 4 பேர் இருந்த நிலையில், ஆட்டோவில் இருவரும் ஏறியதும் காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பரும் இங்கே ஏன் செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு ஆட்டோ ஓட்டுனர், இவ்வழியில் சாலையை மறைத்து வேலை நடக்கிறது அதனால் சுற்றி போகிறோம் என கூறினர். சர்வீஸ் சாலையில் சென்ற ஆட்டோ பாலாற்றின் கரைக்கு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதுவரை அமைதியாக இருந்த கும்பல் திடீரென கத்திமுனையில் பெண் ஊழியரை மிரட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அவர்களிடமிருந்து செல்போன்கள், ஏடிஎம் கார்டை பிடுங்கி சென்று ஒரு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து சென்றனர்.
இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் மருத்துவர் மற்றும் அவரது ஆண் நண்பர் சம்பவம் குறித்து வெளியே கூறாத இந்த நிலையில் தான் சத்துவாச்சாரியில் ரவுடி கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டு காவல் துறையில் பிடிபட்ட பின் இது போன்ற சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கைதான இளம் சிறார் உட்பட நான்கு பேரிடம் கொள்ளையடித்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த நிலையில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தடயங்கள் மற்றும் விசாரணை குறிப்புகள் அடங்கிய 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை வேலூர் மாவட்ட காவல் துறை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்த நீதிபதி, பார்த்திபன், பரத், சந்தோஷ் குமார் ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். தற்போது அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சிறுவன் ஒருவனும் சேர்க்கப்பட்டிருந்தான்.
அந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் சிறுவன் குற்றம் இழைத்தது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 23 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications