வேலூரில் குன்றின் மீது தோன்றிய குட்டி முருகர்.. பக்தர்களுக்கு ஆசி தந்த குழந்தை கைது? அரசின் விளக்கம்
வேலூர்: வேலூரில் 'குட்டி முருகர்' என பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தை கைது செய்யப்பட்டதாக திடீர் தகவல் பரவி பெரும் அதிர்ச்சியை பக்தர்களுக்கு ஏற்படுத்தியது.. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அந்த பொய்த்தகவலை நிராகரித்து, சம்பந்தப்பட்ட விவகாரத்தின் முழுமையான விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது
வேலூரில் பிரபலமாக உள்ளது தீர்த்தகிரி முருகன் கோயில்.... மிகப் பழமையானதும் சக்தி வாய்ந்ததுமான தலமாக இது நம்பப்படுகிறது...

முருகப்பெருமான் தீர்த்தகிரி முருகன் என்ற திருநாமத்தில் இங்கு அருள்பாலிக்கிறார். முருகப்பெருமான் வள்ளி திருமணத்தின்போது இந்த மலையில் இளைப்பாறியதாகவும், அவரது பாதச்சுவடுகள் இந்த மலையில் பதிந்துள்ளதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்....... தீர்த்தம் பெற்ற மலை என்பதாலேயே இந்த இடத்திற்கு தீர்த்தகிரி என்ற பெயர் வந்ததாக சொல்வார்கள்..
வேலூர் கோயிலின் சிறப்பு
இந்த கோயிலில் வழிபாடு செய்தால் நோய் தீரும், மனக்கஷ்டம் விலகும், வேண்டிய வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது... கிருத்திகை, தைப்பூசம், சூரசம்ஹாரம் போன்ற நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகளும் விழாக்களும் நடைபெறுகின்றன.
இந்த கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.... தமிழகத்தில் உள்ள உலகின் மூன்றாவது மிக உயரமான முருகன் சிலை உள்ள மலையும் இந்த கோயில்தான்..!!!
குன்றின் மீது குட்டி முருகர்
இந்நிலையில், இந்த மலைக்கோயிலில் சிறுவன் ஒருவன், அனைவருக்கும் விபூதி வழங்கி யாசகம் பெற்று வந்துள்ளதாக தெரிகிறது..
சிலர் சிறுவர் என்கிறார்கள், சிலர் சிறுமி என்றும் சொல்கிறார்கள்.. ஆனால் இந்த குழந்தை ஆந்திராவை சேர்ந்த மாற்றுத் திறனாளி குழந்தையாகும்.. கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளிலேயே காவி உடை அணிந்து, கழுத்தில் மாலையுடன், உடம்பு முழுவதும் திருநீறு பூசியபடி, அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்திருக்கிறார்.
தனக்கு பக்தர்கள் காணிக்கை தந்தால், அதனை வாங்கி, அருகிலுள்ள உண்டியலில் போட்டுவிட்டு, அந்த பக்தர்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்கியும் வந்துள்ளார் இந்த குட்டி முருகர்.. சில பக்தர்கள் இந்த மலைக்கோயிலுக்கு செல்லும்போதே, பிஸ்கட் போன்ற உணவுகளை வாங்கி சென்று, இந்த குழந்தைக்கு தந்துள்ளார்கள்.
யாசகம் - மாற்றுத் திறனாளி குழந்தை
அந்த குழந்தையின் தெய்வீக உருவமும், மற்றும் வயிறு, நெற்றியில் பூசப்பட்ட விபூதி, கழுத்தில் அணிந்துள்ள மாலை போன்றவைகளை பார்த்து, பக்தர்கள் பரவசத்தின் உச்சிக்கே போய்விடுகிறார்கள்.. அதனால் குட்டி முருகர் என்று இந்த குழந்தையை செல்லமாகவும் அழைத்து வருகிறார்கள்.. இந்த குழந்தை தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியானது..
இந்நிலையில், மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், அந்த குழந்தை யாசகம் பெறுவதாக சொல்லி போலீசார் கைது செய்துவிட்டதாக, சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவின.. இதை பார்த்து பக்தர்கள் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
மாற்றுத்திறனாளி குழந்தையை கைது செய்வதா? விபூதி தந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கியதை தவிர, அந்த குழந்தை செய்த தவறு என்ன? என்று பக்தர்கள் சோஷியல் மீடியாவில் தங்கள் வருத்தங்களை பதிவு செய்தனர்..
தமிழக அரசு விளக்கம்
ஆனால் குழந்தை கைதானதாக வந்த தகவலை தமிழக அரசு மறுத்துள்ளது.. இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த பதிவில் தெரிவித்திருப்பதாவது
"இது முற்றிலும் தவறான தகவல்... வேலூர் மாவட்டம் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் விபூதி வழங்கி ஆசி வழங்கி வந்த மாற்றுத்திறனாளி குழந்தை மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்... அவரது பெற்றோருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன,
ஆனால் குழந்தை கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. சிறார்கள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பயன்படுத்தி தவறான தகவலை பரப்புவது சட்டப்படி குற்றமாகும். வதந்திகளை பரப்பாதீர்கள்" என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications