விழுப்புரத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட முதியவர் பலி
விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 55 வயதுடைய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 51 வயதுடைய முதியவர் ஒருவா் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டாா். மீதமுள்ள 22 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் அடையாளம் காணப்பட்டு, பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் விழுப்புரம் நகராட்சிகுட்பட்ட 7 வார்டுகள் முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டு அங்கிருக்கும் மக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த 2 தினங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் பாணாம்பட்டு பகுதியை சேர்ந்த 55 வயதுடைய முதியவர் கடந்த மார்ச் மாதம் டில்லியில் நடைபெற்ற மத மாநாட்டிற்கு சென்று வந்தார். இதனையடுத்து அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே நேற்று அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்த காரணத்தினால், மீண்டும் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அந்த நபருக்கு இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட கொரோனா ரத்த மாதிரி சோதனை முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் உயிரிழந்தவரின் உடலை கொரோனா நோய்க்கான வழிகாட்டுதல்படி அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications