கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு..உறவினர்கள் மறியல்
விழுப்புரம்: மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் வம்பாமேடு என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் சங்கர் (50), தரணிவேல் (50), மண்ணாங்கட்டி (47), சந்திரன் (65), சுரேஷ் (65). மற்றொரு மண்ணாங்கட்டி (55) ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்தனர்.

சாராயம் குடித்துவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்ற அவர்கள் 6 பேரும் திடீரென மயங்கி விழுந்தனர். இவர்கள் மயங்கி விழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவர்களை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் ஜிப்மர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சங்கர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து எக்கியர்குப்பம் மீனவ கிராமத்திற்கு மரக்காணம் போலீஸார் விரைந்தனர். அங்கு கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு மயக்க நிலையில் வாந்தி எடுத்த தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகை வாசன், ரமேஷ் , ராஜமூர்த்தி ஆகிய 5 பேரை மீட்ட போலீஸார் போலீஸார் வாகனத்திலேயே அவர்களை மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த விழுப்புரம் ஆட்சியர் பழனி, காவல் துறை எஸ்பி ஸ்ரீநாதா ஆகியோர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்களிடம் உடல் நலம் குறித்து விசாரித்தனர். இந்த நிலையில் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், தரணிவேலே ஆகியோர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி உயிரிழந்துவிட்டார். இதனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் பலி 4 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேலும் 2 பேர் சிகிச்சை பலனிறி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து 6 பேர் பலியானது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இன்று காலை டிஐஜி பகவலன், எஸ்பி ஸ்ரீநாதா உள்ளிட்டோர் எக்கியார்குப்பம் கிராமத்திற்கு விரைந்தனர். மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டனர்.

விசாரணையில் மரக்காணம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அமரன் (25) என்பவர் புதுவை மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை விற்றதும், இதனை வாங்கி எக்கியார்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த பலர் நேற்று மாலை குடித்ததும் தெரியவந்தது.
மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன் அமரன் விற்ற கள்ள சாராயத்தை குடித்துவிட்டு எக்கியார்குப்பம் மீனவ பகுதியை சேர்ந்த சுப்புராயன் வயது (60) என்பவரும் இறந்து விட்டதாக கிராம மக்கள் கூறினர். எனவே அமரனை கைது செய்யக் கோரி உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அமரன் விரைந்து கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications