"பிக்பாஸ்".. எல்லாரோட போனையும் பிடுங்கி வச்சுக்க போறேன்.. சட்டென முகம் மாறிய அன்புமணி.. வந்ததே கோபம்
விழுப்புரம்: ஒன்றிய செயலாளர்கள் கையில் இருக்கும் போனை எல்லாம் பிடுங்கிக்கொள்வேன் என்று கட்சி கூட்டம் ஒன்றில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காட்டமாக பேசினார்.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதில் இருந்து கட்சியை பலப்படுத்தும் பணிகளை பாமக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அதன் தலைவர் அன்புமணி பயணம் மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் அவர் பயணம் மேற்கொண்டார். இதையடுத்து இன்று காலை விழுப்புரம் சென்றவர் அங்கு பாமக நிர்வாகிகள் முன்னிலையில் பேசினார்.

அன்புமணி ராமதாஸ்
இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விழுப்புரத்தில் பேசுகையில், ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதிக்கும் நான் 3 நாட்கள் செல்ல போகிறேன். நிறைய பிளான் போட்டு இருக்கிறேன். நான் எல்லா கிராமங்களுக்கும் செல்வேன். 2026ல் நாம்தான் ஆட்சியை பிடிக்க வேண்டும். கிராம பிரச்சனைகள் பற்றி நாம் பேச வேண்டும். சமூக நீதி பிரச்சனைகள் பற்றி நாம் பேச வேண்டும். அதற்கு பாமகதான் வேண்டும். பாமக மட்டுமே இதை பற்றி எல்லாம் பேச முடியும்.

பாமக
காலநிலை மாற்றம் பற்றி பேச சொல்லுங்கள். எந்த கட்சிக்கும் பேச தெரியாது. ஆனால் பாமக மட்டுமே இதை பற்றி பேசி வருகிறது. இதற்காக நேற்று கூட நாங்கள் கூட்டம் நடத்தினோம். 20 வருடமாக நாங்கள் பருவநிலை மாற்றம் பற்றி பேசி வருகிறோம். மக்கள் இதை பார்த்து வருகிறார்கள். நடப்பதை அவர்கள் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

காலநிலை
நாம் மக்களிடம் செல்ல வேண்டும். மக்கள் நம்மை மதிக்கிறார்கள். இவங்க வந்தால் மாற்றம் இருக்கும் என்று நினைக்கிறார்கள். நாம் இதற்காகவே மக்களிடம் செல்ல வேண்டும். செல்போன் அரசியலை விடுங்கள். மக்களிடம் செல்லுங்கள். நாம் செல்போனை எல்லாம் தூக்கி வீச வேண்டும். மக்களிடம் சென்று அரசியல் செய்ய வேண்டும்.

ஒன்றிய செயலாளர்
நான் ஒன்றிய செயலாளர்கள் எல்லோரிடமும் இருந்து போனை பிடுங்க போகிறேன். போனை வைத்து அரசியல் செய்கிறார்கள். நான் உங்கள் போனை பிடுங்கிக்கொண்டு சென்னைக்கு எடுத்து செல்ல போகிறேன். நீங்கள் மக்களிடம் சென்று களப்பணிகளை செய்யுங்கள். செல்போனை வைத்து அரசியல் செய்வதாக காட்டிக்கொள்ள வேண்டாம்.

பிக்பாஸ்
நான் உங்கள் எல்லோரையும் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறேன். பிக்பாஸ் மாதிரி நான் உங்களை எல்லாம் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறேன். எல்லா இடங்களில் கேமரா இருக்கிறது. அதன் மூலம் உங்களை கண்காணித்துக்கொண்டு இருக்கிறேன். அதனால் எல்லோரும் போனை தூக்கி வீசிவிட்டு கட்சிக்காக பணி செய்யுங்கள். மக்களிடம் செல்லுங்கள், என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார்.











Click it and Unblock the Notifications