மாமல்லபுரம் போல் மற்ற ஊர்களையும் கவனியுங்கள்... மு.க.ஸ்டாலின் பேச்சு
விக்கிரவாண்டி: சீன அதிபர் வருகைக்காக மாமல்லபுரத்தில் காட்டிய அக்கறையை மற்ற ஊர்களுக்கும் தமிழக அரசு காட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து விக்ரவாண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இதனைத் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் தமிழகத்தின் பல பகுதிகள் கவனிப்பாரற்றுக் கிடப்பதாக வேதனைத் தெரிவித்தார்.

பாடம் புகட்டுக
பா.ஜ.க.வின் அடிமையாக தமிழகத்தில் எடப்பாடி அரசு நடைபெறுவதாகவும், அதற்கு மக்கள் இடைத்தேர்தல் மூலம் நல்ல பாடம் புகட்ட வேண்டும் எனவும் பேசினார். தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியே இல்லை என்றும், இது பாஜக ஆட்சி எனவும் விமர்சித்தார்.

கோரிக்கை
சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வந்துள்ளதால், சிங்கப்பூரை மிஞ்சும் வகையில் அங்கு அழகுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார். வெளிநாட்டுத் தலைவர் வருவதால் சுத்தம் செய்திருக்கிறார்கள், செய்யட்டும் அதனை தாம் தவறு எனக் கூறவில்லை என்றும், ஆனாலே அதே நேரம் மாமல்லபுரத்தில் காட்டிய அக்கறையை மற்ற ஊர்களுக்கும் தமிழக அரசு காட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தோல்வி பயம்
கடந்த 8 வருடமாக உள்ளாட்சித் தேர்தலை இந்த ஆட்சி நடத்தவில்லை என்றும், ஏனென்றால், உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் தி.மு.க வெற்றி பெற்றுவிடும். நாம் தோற்றுவிடுவோம் என்று, நடத்தாமல் அதிமுக அரசு தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார்.

தீர்வு தேவை
மக்கள் அடிப்படை பிரச்சனைகளை கூட தீர்க்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும், யாரிடம் குறைகளை முறையிடுவது என்பது கூட தெரியாத ஒரு அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications