மாநிலக் கட்சி..விக்கிரவாண்டியில் ஒரு கை பார்ப்போம்! களத்தில் குதிக்கும் நாம் தமிழர்..வேட்பாளர் இவரா?
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் முதல் ஆளாக திமுக தனது வேட்பாளரை அறிவித்திருக்கிறது. அதிமுக இன்னும் இரண்டு மூன்று தினங்களில் வேட்பாளர் பெயரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் களமிறங்கவுள்ளது.
விக்கிரவாண்டி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி திடீர் மரணம் அடைந்தார். இதை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இடைத்தேர்தல் நடக்கும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
முன்னதாக அமைச்சர் பொன்முடியின் மகனான கௌதம் சிகாமணி பெயர் வேட்பாளர் பட்டியலில் அடிபட்ட நிலையில் இறுதியில் அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் தான் கட்சியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.
அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் எம்எல்ஏ முத்தமிழ்செல்வனுக்கு மறுபடியும் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016 தேர்தலில் வெற்றி பெற்ற முத்தமிழ்ச் செல்வன் 2021 தேர்தலில் புகழேந்தியிடம் தோல்வி அடைந்தார். புகழேந்தி 93 ஆயிரத்து 730 வாக்குகளை பெற்றிருந்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட முத்தமிழ்செல்வன் 84,157 ஓட்டுகளை பெற்றிருந்தார். வெறும் ஒன்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் புகழேந்தி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக தற்போது முத்தமிழ்ச் செல்வன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மேலும் இருவரது பெயர்களும் அடிபடும் நிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் போட்டியிடுவாரா என்பது குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்கள் வாக்கு அதிகம் என்பதாலும் ஏற்கனவே ஓரளவு வாக்கு வங்கி இருப்பதாலும் பாட்டாளி மக்கள் கட்சியும் தனது வேட்பாளரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் மும்மனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 4 முனை போட்டி ஏற்படுவதற்கான சூழல் உருவாகி இருக்கிறது. அதாவது இதுவரை தமிழகத்தில் தனித்தே களம் கண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் களமிறங்கவுள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகள் பெற்றிருந்தார்.
இந்த தேர்தலில் அவரே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு நல்ல சதவீத வாக்குகள் கிடைத்தது. இதை அடுத்து தற்போது தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு உயர்ந்திருக்கும் நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் ஒரு கை பார்த்து விடலாம் என முடிவு செய்திருக்கின்றனர் நிர்வாகிகள். இதை அடுத்து ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நாம் தமிழர் கட்சி மீண்டும் போட்டியிடுவது உறுதி என்றும், வேட்பாளர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சீமானால் வெளியிடப்படும் என்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.












Click it and Unblock the Notifications