நிறுவனர், தலைவர்.. கூட்டணி முடிவு எடுக்கவும் ராமதாசுக்கே உரிமை.. பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
விழுப்புரம்: ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு உள்ள நிலையில் இன்று விழுப்புரத்தில் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு (PMK General Committee) கூட்டம் நடைபெற்றது. புதுவையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் இன்று காலை 10 மணி அளவில் கூட்டம் தொடங்கி நடந்தது. இதில் மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாமக நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸே செயல்படுவார் எனவும், வரும் தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க ராமதாசுக்கே முழு அதிகாரம் என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அன்புமணியை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்த ராமதாஸ் அவர் இனி செயல் தலைவர் மட்டுமே என்றும், கட்சியின் நிறுவனராகவும், தலைவராகவும் நானே செயல்படுவேன் என்றும் அறிவித்துள்ளார்.

தொண்டர்கள் குழப்பம்
அதேவேளையில், ராமதாஸால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அன்புமணி கட்சியில் சேர்ப்பதாக அறிவித்தார். இப்படி இருவரும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டு வருவதால் பாமகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாமக இரு அணிகளாக செயல்பட்டு வருவதால், யாருடன் நிற்பது என்று தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்புமணி தரப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த பொதுக்குழுவில் பாமகவின் தலைவராக அன்புமணிக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுவுக்கு தடை கேட்ட ராமதாஸ் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ராமதாஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்தது.
இன்று பாமக பொதுக்குழு
இதனிடையே, பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்த்தார். புதுச்சேரி - திண்டிவனம் சாலையில், உள்ள சங்கமித்ரா அரங்கில் இன்று காலை 10 மணி அளவில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக ராமதாஸ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த பொதுக்குழுவில் மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக டாக்டர் ராமதாஸ் செயல்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றம்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாமக உரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற, யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முடிவினை எடுக்க ராமதாசுக்கே முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்ற்றம். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காந்திமதிக்கு முக்கிய பொறுப்பு
குறிப்பாக ராமதாஸ் மகள் காந்திமதிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பொதுக்குழுவில் புதிய இளைஞர் அணி தலைவரை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது. இது பற்றி ராமதாஸிடம் நேற்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ராமதாஸ், "இதையெல்லாம் இப்போதே உங்களிடம் தெரிவித்தால், நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஒரு இது இருக்காதே"என்று பதிலளித்தார்.
மேலும் இன்று நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக சில விஷமிகள் தவறான தகவலை பரப்புவதாகவும் ராமதாஸ் கூறியிருந்தார். மேலும் அன்புமணி தன்னிடம் ஆசிர்வாதம் எல்லாம் வாங்கவில்லை, பொய் சொல்கிறார் எனவும், திட்டமிட்டப்படி இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும் ராமதாஸ் கூறியிருந்தார்.
அன்புமணி ஆதரவாளர் விளக்கம்
பாமகவில் நிறுவனருக்குக் எந்த அதிகாரமும் இல்லை என்று அன்புமணி ஆதரவாளரும், பாமக வழக்கறிஞருமான பாலு நேற்று அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அன்புமணியின் பதவிக்காலம் கடந்த 9 ஆம் தேதியிலிருந்து மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்துள்ளோம். இதனால், தற்போது பா.ம.க. தலைவராக அன்புமணியே உள்ளார்.
தலைவர் இல்லாமல் கூட்டும் பொதுக்குழு செல்லாது என்று பாலு கூறினார். இத்தகைய பரபரப்புக்கு இடையேதான் இன்று ராமதாஸ் கூட்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்னென்ன? என்பதை அன்புமணி தரப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications