ஜாக்பாட்.. விக்கிரவாண்டியில் நாளை தேர்தல் வைத்தாலும் வெற்றி தான்! லோக் சபா டேட்டாவுடன் வரும் உபிகள்
விழுப்புரம்: விக்கிரவாண்டி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த தேர்தலிலும் 4 முனைப் போட்டியே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும் போது திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் திமுகவினர்.
கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் விழுப்புரத்தில் மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அதில் கலந்து கொண்டிருந்த விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் புகழேந்தி மயங்கி விழுந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்தார். இந்த தகவல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டதை அடுத்து ஏப்ரல் 8ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணையம்: தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படி ஒரு எம்எல்ஏ எம்பி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் அதிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. புகழேந்தி உயிரிழப்புக்கு முன்னதாகவே மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை ஆகியவை நிறைவடைந்து இருக்கின்றன. இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக இருக்கும் 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது.
விக்கிரவாண்டி இடை தேர்தல்: அதன்படி வரும் ஜூலை 10ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்பித்து ஜூன் 21ஆம் தேதி நிறைவடைகிறது. 24ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும் 26ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் 13-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும் போது திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் திமுகவினர். விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரவிக்குமார், அதிமுக சார்பில் பாக்யராஜ், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முரளி சங்கர் ஆகியோர் களமிறங்கினர். இதில் சுமார் 41% அதாவது 4,77,033 வாக்குகள் பெற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் வெற்றி பெற்றார்.
அதற்கடுத்து பாக்கியராஜ் 35 சதவீத வாக்குகள் அதாவது நான்கு லட்சத்து 6 ஆயிரத்து 330 வாக்குகளை பெற்றிருந்தார். மூன்றாவது இடத்தில் இருக்கும் முரளி சங்கர் 15 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். அதாவது ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 882 வாக்குகளை பெற்றிருந்தார். இதன்மூலம் விழுப்புரத்தில் கிட்டத்தட்ட அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் ரவிக்குமாருக்கு கடும் போட்டி அளித்து இருந்தார் என்றே கூற வேண்டும்.
அதே நேரத்தில் விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் பதிவான வாக்குகள் தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. இதனை வைத்து தான் விக்கிரவாண்டியில் திமுக தான் வெற்றி பெறும் என உடன் பிறப்புகள் கூறி வருகின்றனர். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலின் போது விசிக 72,188 வாக்குகளையும், அதிமுக 65,365 வாக்குகளையும், பாமக 32,198 வாக்குகளையும் பெற்றிருந்தன.
அதே நேரத்தில் மக்களவை தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு. கடந்த மக்களவை தேர்தலின் போது சட்டசபை இடைத் தேர்தலும் நடைபெற்றது. தமிழகத்தில் 38 தொகுதிகளில் அதிமுக தோற்றாலும், ஆட்சிக்கு தேவையான 9 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்ற நிலையில் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தக்க வைத்துக் கொண்டார். எனவே இடைத்தேர்தலில் எந்த மாதிரியான முடிவு கிடைக்கும் என்பது வேட்பாளர் தேர்வுக்கு பிறகு தெரியவரும் என்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications