முதல் சுற்று.. வெறும் 7 வாக்குகள் வித்தியாசத்தில் விசிக முன்னிலை.. அதிமுக கடும் போட்டி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி உள்ளது. வெறும் 7 வாக்குகள் வித்தியாசத்தில் விசிக முன்னிலை வகிக்கிறது. அதிமுக வேட்பாளர் கடும் போட்டி தந்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று வானூர். இது தனித்தொகுதியாகும். விழுப்புரம் மாவட்ட எல்லையோரத்தில் புதுவை மாநிலத்துக்கு அருகில் அமைந்துள்ள பகுதி என்பதால் நில அமைப்பில் வானூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ஏராளமானவை புதுவை மாநிலத்துக்கு இடையிடையே உள்ளது.
இங்கு, வானூர், கண்டமங்கலம், கோட்டக்குப்பம் ஆகிய பேரூராட்சிகளும், கொடுக்கூர், சித்தலம்பட்டு, திருமங்கலம், முட்ராம்பாட்டு, கலிங்கமலை, வழுதாவூர், பக்கிரிப்பாளையம், நெற்குணம், குராம்பாளையம், வாதனூர், மாத்தூர், சேஷங்கனூர், கலித்திராம்பட்டு, அம்மணங்குப்பம், பெரியபாபுசமுத்திரம், சின்னபாபுசமுத்திரம், பள்ளிதென்னல், நவமால்காப்பேர், கண்டமங்கலம், ஆழியூர், பள்ளிநெலியனூர், கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி, பள்ளிப்புதுப்பட்டு, மிட்டாமண்டகப்பட்டு, நவமால் மருதூர், கோண்டூர், சொக்கம்பட்டு, மெட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, சொரப்பூர், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம், ராம்பாக்கம், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர் மேல்பாதி, களஞ்சிக்குப்பம் மற்றும் பேரிச்சம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.

திராவி கட்சிகள்
வானூர் தொகுதி, கடந்த 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் அன்று முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளன. 13 முறை அங்கு தேர்தல் நடைபெற்றுள்ளது.

7 முறை வெற்றி
1962, 1967 ஆம் ஆண்டுகளிலும், 1971, 1977, 1980, 1984, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளிலும் பேரவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தொகுதியை திமுக அதிக முறை கைப்பற்றியுள்ளது. 7 முறை திமுகவும், 6 முறை அதிமுக வென்றுள்ளது. குறிப்பாக, தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து நடைபெற்ற முதல் 5 தேர்தல்களில் திமுக வெற்றி வாகை சூடி உள்ளது.

4 முறை தொடர்ந்த வெற்றி
2001,2006 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட கணபதி இரண்டு முறையும் வெற்றி பெற்றார். 2011இல் அதிமுக சார்பில் ஜானகிராமனும், 2016இல் எம்.சக்கரபாணியும் வெற்றி பெற்றனர்.

வன்னியரசு முன்னிலை
தற்போதைய நிலையில் வானூர் தொகுதியில் முதல் சுற்று முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வன்னியரசு 3831 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் சக்ரபாணி- 3824 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார். விசிக, அதிமுக இடையே வெறும் 7 வாக்குகள் வித்தியாசம் உள்ளது. இந்த கடும் போட்டி காரணமாக பரபரப்பு காணப்படுகிறது. பக்கத்து தொகுதிகளான உளுந்தூர்பேட்டையில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. விழுப்புரம் தொகுதியில் திமுக முன்னிலை வகிக்கிறது.












Click it and Unblock the Notifications