களத்தில் 9 அமைச்சர்கள்! விக்கிரவாண்டி மீது 24X7 ஸ்டாலின் கண்! அதிமுக சைலண்ட்! நாதக விறுவிறு
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பணிகளைக் கவனித்துக் கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் 9 அமைச்சர்களைக் களத்தில் இறக்கி இருக்கிறார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து, இந்தத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த மக்களவைத் தேர்தலை ஒட்டி, இந்தச் சட்டமன்றத் தொகுதிக்குச் சேர்த்துத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அதற்காக அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தொகுதிக்கு மட்டும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் நடத்தியது.
இந்நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் உட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி கடந்த 8 ஆண்டுகளில் 2முறை இடைத்தேர்தல்களைச் சந்தித்துள்ளது. மறைந்த திமுக எம்.எல்.ஏ. நா. புகழேந்தி 2011இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 93,730 வாக்குகளைப் பெற்றார். வெற்றிக்கனியைப் பரிசாக திமுக தலைமைக்குக் கொடுத்தார்.
திமுக அரசு தனது 4 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்ததன் அடையாளமாக விழா நடைபெற உள்ள தருணத்தில், உடல்நிலை குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் மறைந்தார். .

இதேபோல் 2011 தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினரான கு. ராதாமணி 2019 ஆம் ஆண்டு மறைந்தார்.
இந்தத் தொகுதியில் ஆட்சிக்காலத்திலேயே தனது 2 சட்டமன்ற உறுப்பினர்களை திமுக இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கூடவே அந்தத் தொகுதி மக்களும் தங்களது சட்டமன்ற உறுப்பினர்களை இழந்துள்ளனர்.
திமுக எதிர்க்கட்சியாக அமர துணையாக இருந்த கடந்த 2016இல் சட்டமன்றத் தேர்தலில் கூட, அதிமுகவால் விக்கிரவாண்டியில் வெற்றி பெற முடியவில்லை. அந்தளவுக்கு இத்தொகுதியின் திமுகவின் உள்ளது.
இந்த விக்கிரவாண்டி தொகுதியில் திமுக மற்றும் அதிமுக தாண்டி சிபிஐ (எம்) சார்பில் 2011 ஆர். ராமமூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி விழுப்புரம் மாவட்டத்திற்குள் வருவதால், பொன்முடியின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அதே வேகத்தில் தனது வேட்பாளரை அறிவித்துள்ளது திமுக தலைமை. முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி காலம் தொட்டு முக்கிய புள்ளியாக வலம் வந்த அன்னியூர் சிவாவை வேட்பாளராக இந்த முறை களம் இறக்கியுள்ளது திமுக.
அதே வேகத்தில் நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை அறிவித்துள்ளது. ஆனால், வட தமிழ்நாட்டில் பலம் உள்ள கட்சி எனக் கூறப்படும் பாமக இந்தத் தேர்தலில் போட்டியிடுமா? இல்லையா? என இன்னும் தெரியவில்லை.
பாஜக கூட்டணியில் உள்ள அக்கட்சி அதே பலத்துடன் களம் காணுமா என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில் 2வது பெரிய கட்சி நாங்கள் தான் எனக் கூறி வரும் அண்ணாமலை கூட பாஜக சார்பாக வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் 3வது இடைத் தேர்தல் இது. முதலில் ஈரோடு கிழக்கு. ஈவிகேஎஸ் மகன் மறைவை அடுத்து அவரது தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது.
திருமங்கலம் ஃபார்முலா என்பதைப்போல இந்தத் தேர்தலில் ஈரோடு இடைத்தேர்தல் ஃபார்முலா ஒன்றை புதியதாக அறிமுகம் செய்தார் செந்தில் பாலாஜி என்று பரவலாகப் பலரும் பேசி வந்தனர். இதிலும் ஆளும் கட்சி சார்பாகக் களம் இறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் தான் வெற்றி பெற்றார்.
அதனை அடுத்து இப்போது விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை விஜயதாரணி ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் இப்போதுதான் நடந்து முடிந்தது.
அப்படிப் பார்த்தால், திமுக ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் இரண்டு இடைத்தேர்தல்களைக் கண்டுவிட்டது. காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டாலும் அது திமுக வேட்பாளர் நிற்பதைப் போலவே மிகக் கவனமாகத் தனது கட்சி பொறுப்பாளர்களை நியமித்தார் முதல்வர் ஸ்டாலின்.
கூட்டணிக்கட்சி வேட்பாளர்களையே தலையில் வைத்துத் தாங்கிய திமுக, இப்போது விக்கிரவாண்டி தனது சொந்தக் கட்சி வேட்பாளரை இழந்துள்ளது. ஆகவே வெற்றிக்கனியைப் பறிக்க 9 அமைச்சர்களைக் களம் இறங்கியுள்ளார் ஸ்டாலின்.
கள்ளக்குறிச்சி எம்பி கவுதம் சிகாமணி விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளராக முதல்வர் நியமித்துள்ளார். கூடவே அமைச்சர் பொன்முடியும் இணைந்திருக்கிறார்.
இதைக் கடந்து கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி, தாமோ அன்பரசன், விசி கணேசன், அன்பில் மகேஸ், எஸ் எஸ் சிவசங்கர் என ஒட்டுமொத்த அமைச்சரைவையும் விக்கிரவாண்டியில்முகாமிட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியைப் பகுதி வாரியாக, ஊர்வாரியாக அமைச்சர்கள் பிரித்துக் கொடுத்துள்ளது திமுக தலைமை. இந்தப் பட்டியலில் உள்ள அமைச்சர்கள் போதாது என்று கூடவே எம்பி ஜெகத்ரட்சகன், விழுப்புரம் எம் எல் ஏ லட்சுமணன் ஆகியோரையும் களத்தில் இறக்கிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்வி பற்றியே எடப்பாடி பழனிசாமி பெரிதாகக் கவலைப்படவில்லை. கட்சி தோல்வி குறித்து ஆலோசனைக் கூட்டமோ, பொறுப்பாளர்களைப் பதவி நீக்கமோ அவர் செய்யவில்லை.
கூலாக ஒரு சதவீதம் நாங்கள் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளோம் என்கிறார். 2019 அதிமுக நின்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை என்ன? 2024 அதிமுக போட்டிப் போட்ட தொகுதிகள் எவ்வளவு என்பதை எல்லாம் ஆராயாமல் 1% கூடுதல் என்கிறார்.
ஆகவே, அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங் வேட்பாளர் 91054 வாக்குகளைப் பெற்று 40174 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை 2வது இடத்திற்குத் தள்ளி இருக்கிறார்.

இந்த இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வாங்கிய ஓட்டுகள் மொத்தம் 5267 . அதாவது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 8150 வாக்குகளைவிடக் குறைந்து 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக.
ஆனால், இந்த இடைத் தேர்தல் ஆளும் கட்சியான திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் முக்கிய. ஏனென்றால் 2026இல் அவர் 200 தொகுதிகளை இலக்கு வைத்துள்ளார்.
இந்தத் தொகுதியில் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. அது விசிகவிடம் உள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் விட விசிக வேட்பாளர் ரவிக்குமார் சுமார் 6 ஆயிரம் வாக்குகள் மேல்தான் அதிகம் பெற்றுள்ளார்.
ஆகவே அஜாக்கிரதை கூடாது என கண்டிஷன் போட்டுள்ளார் ஸ்டாலின். அதற்காகத்தான் 9 அமைச்சர்கள் விக்கிரவாண்டியில் சுற்றிச் சுற்றி வலம்வர ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications