சீமானின் வியூகம் என்ன? பின் வாங்கிய பிரேமலதா; அமைதியில் அதிமுக! பாமக ஓட்டை பிரிக்கிறதா நாதக?
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சீமான் அதிமுக மற்றும் தேமுதிக ஆதரவைக் கேட்டுக் கொண்ட நிலையில், அதற்கு வாய்ப்பு இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அப்படி என்றால், சீமான் ஏன் ஒரு இடைத்தேர்தலுக்காகக் கூட்டணிக்காக அழைப்பு விடுக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக தனித்துச் செயல்பட்டவர் இப்போது ஏன் தேர்தல் களத்தில் துணையை தேட வேண்டும்? அவரது வியூகம் தான் என்ன?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். அதிமுக, தேமுதிக தேர்தலைப் புறக்கணித்துள்ளது. பாஜக தனது கூட்டணியில் உள்ள பாமகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது. களத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள சீமான், நேரடியாக அதிமுக மற்றும் தேமுதிகவிடம் ஆதரவு கேட்டுள்ளார். மேலும் அந்தத் தொகுதியில் பாமக வேட்பாளரை நிறுத்தியுள்ளதால், விசிக தலித் ஓட்டுகள் நேரடியாக திமுகவுக்குத்தான் போகும். அதே அதிமுகவிலும் தேமுதிகவிலும் உள்ள தலித் ஓட்டுகள் திமுகவுக்குப் போகக் கூடாது என்பதால் சீமான் ஒரு வியூகத்தைக் கட்டமைத்து அதன் போக்கில் பேசி வருகிறார்.

தொகுதி பிரச்சாரத்தின் போது திமுகவை விமர்சிக்க வந்த சீமான், திருமாவளவனுக்கு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஒரு பொதுத் தொகுதியைக் கூட ஒதுக்கவில்லை என்பதை ஆவேசமாகச் சுட்டிக்காட்டிவிட்டு, ஆதிதிராவிடர்கள் என திமுக சொல்கிறது. தமிழ்த் தேசியம் அவர்களை ஆதித் தமிழர் என்று சொல்கிறது. அதைப் புரிந்து கொண்டு வாக்களியுங்கள் என்றார்.
அதாவது அதிமுக, தேமுதிக உட்பட திமுகவுக்கு எதிரான உள்ள தலித் ஓட்டுகளைக் கவர் செய்யும் படி பேசி வருகிறார். கூடவே விசிகவை தாக்குவதைப் போலப் பேசி அங்கேயும் ஒரு மனக்கசப்பை ஏற்படுத்தி அதில் ஏதேனும் ஓட்டுக்களைப் பெற முடியுமா என யோசித்துச் செயல்படுகிறார். மேலும் பிரபாகரன் பிரேமதாசா விவகாரங்களைச் சுட்டிக்காட்டி அன்று எப்படி புலிகள் வியூகம் வகுத்தார்களோ அதே மாதிரியான ஒரு வியூகத்தை நான் வகுப்பதாகச் சொல்லிய சீமான், குறிப்பாக அதிமுக, தேமுதிக கட்சியில் உள்ள உறவுகள் சிந்தித்துப் பார்த்து என்னை ஆதரிக்க வேண்டும் என்று வெளிப்படையாக வேண்டுகோள் வைத்துள்ளார். ஏனென்றால், பொது எதிரி திமுகதான். அதை எதிர்க்க வாருங்கள் என்றும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய சீமான், பல தேர்தல்களில் கூட்டணி வைக்காமல் தனித்து ஆதரித்து வந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார். 2009இல் திமுகவை வீழ்த்த இரட்டை இலைக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்ததையும் 2011இல் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணியை ஆதரித்ததையும் பற்றி நினைவுகூர்ந்துள்ளார். கூடவே 2014 மக்களவைத் தேர்தலிலும் அதிமுகவைத்தான் ஆதரித்ததாகக் கூறிய சீமான், 'கொஞ்சம் மனது வைத்து என்னைத் தூக்கிவிடுங்கள்' என்று அன்பாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சீமான் சொல்வதைப்போல ஜெயலலிதாவை, விஜயகாந்த்தை, சசிகலாவை எனத் தொடர்ச்சியாக ஆதரித்த இவர் இதுவரை திமுகவை மட்டுமே எதிர்த்து வருகிறார். அப்படிப் பார்த்தால், இது திமுகவின் ஆட்சியில் நடக்கும் இடைத்தேர்தல் என்பதால்தான் போட்டியிடுகிறாரா? என்ற சந்தேகத்தை இன்னொரு பக்கம் கிளப்பியுள்ளது.
விருதுநகரில் மக்களவைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்திவிட்டு, தேர்தலில் விஜய பிரபாகரன் தோல்வியடைந்த பிறகு, 'கடைசி வரை நம்பினேன்' என்று இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் கண்கலங்கி இருக்கிறார். அப்படி என்றால், அந்த ஒரு தொகுதியில் வேட்பாளரை ஏன் சீமான் திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை என்று சமூக ஊடகங்களில் கருத்து கூறும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. மேலும் ஆளும் கட்சியாக உள்ள திமுகவை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்பதால்தான் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவே பின் வாங்கி விட்டது. மேலும் சீமானே சொல்கிறார், ஒரு திமுக அமைச்சர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக 20 கோடி செலவு செய்ய உள்ளார்கள் என்று. அப்படி என்றால்? எப்படி எதிர்த்து வெற்றி பெற முடியும் என லாஜிக் ஆக ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. பணபலம், அதிகார பலம் இரண்டை எப்படி சீமானால் சமாளிக்க முடியும் என்று கேள்வி எழுகிறது. இந்த இடைத்தேர்தலை மனதில் வைத்து 2026க்கு இப்போதே ஒரு கூட்டணியைக் கட்டமைக்க முயற்சி செய்கிறார் என்றும் சொல்கிறார்கள் சிலர்.
இந்நிலையில்தான் அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் வந்து கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் இது குறித்து வெளிப்படையாக ஒரு பதிலைக் கூறியுள்ளார். இது குறித்து அவர், "சீமான் வெளிப்படையாக ஆதரவு கேட்டுள்ளார். அவருக்கு எங்கள் வாழ்த்துகள். ஆனால், இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை தேமுதிக புறக்கணிக்கிறது. இந்த முடிவைச் சிந்தித்துத்தான் அறிவித்துள்ளோம். இதுவரை எந்தத் தேர்தலையும் தேமுதிக புறக்கணித்ததில்லை. எல்லா தேர்தல்களையும் தைரியமாக எதிர்கொண்டுதான் வந்துள்ளோம்.
முதல் முறையாக இப்போதுதான் புறக்கணித்துள்ளோம். அதற்குக் காரணம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களை ஆட்டு மந்தையில் போட்டு அடைத்து வைத்ததை மாதிரி வைத்து ஒரு அநாகரிகமான அரசியலைக் கையில் எடுத்தார்கள். இப்போதும் அதே நான் விக்கிரவாண்டியிலும் நடக்கப் போகிறது. இந்தத் தேர்தலால் யாருக்கும் எந்தப் பலனும் கிடைக்காது. அதை உணர்த்தவே இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளோம்" என்று சீமான் கோரிக்கையை மறைமுகமாக நிராகரித்திருக்கிறார்.
அதிமுகவும் சீமானை ஆதரிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. முன்பே விக்கிரவாண்டி தங்களில் லிஸ்டில் இல்லை என்று விஜய் பேச்சை முடித்துக் கொண்டுவிட்டார். ஆக, எப்படிப் பார்த்தாலும் சீமான் பாமகவுக்கு தமிழ் ஓட்டுகளைப் போகவிடாமல் தடுப்பார். கூடுதலாக அதிமுக, தேமுதிக ஓட்டுகளை விழ விடாமல் தடுப்பார். மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கும் பாமகவுக்கும் இடையே சில மனக்கசப்புகள் வந்தன. ஆகவே அந்தத் தொண்டர்கள் பாமகவை ஆதரிக்க மாட்டார்கள். இந்தத் தேர்தல் மூலம் 2வது இடத்தை எப்படியாவது நாம் தமிழர் பிடித்துவிட்டால், அது பாமகவுக்கு அடியாகவும் சீமான் வெற்றிக்கு ஒரு படியாகவும் அமையும். அதுதான் அவரது வியூகமாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications