வைகாசி மாத பிரதோஷம் + பௌர்ணமி.. சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி உண்டா? வனத்துறை விளக்கம்
விருதுநகர்: தமிழகத்தில் கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாடுக்கு சதுரகிரி கோயிலுக்கு அனுமதி வழங்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
வழக்கமாக தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில்தான் கோடை வெயில் தொடங்கும். ஆனால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பிப்ரவரி இறுதியில் வெயில் தொடங்கிவிட்டது. மார்ச்சில் ஏற்றம் கண்ட வெயில், ஏப்ரலில் உச்சத்தை தொட்டது. தமிழகத்தின் பரவலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியிருந்தது.

குறிப்பாக ஈரோடு, கோவை, கரூர் என கொங்கு மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், வேலூர், திருப்பத்தூர், திருத்தணி என வட மாவட்டங்களில் வெயில் 105 டிகிரிக்கு அதிகமாக பதிவாகியிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது கோடை மழை தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் தென் மாவட்டங்களில் தலையை காட்டிய மழை, கொஞ்சம் கொஞ்சமாக வட மாவட்டங்களை நோக்கி ஏற தொடங்கியது.
100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான பகுதிகளில் மழை புரட்டி எடுத்தது. ஏற்காடு, ஈரோடு, வேலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழை தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.
நேற்று தென் மாவட்டங்களில் பெய்த கனமழை பல்வேறு அருவிகளில் வெள்ள பெருக்கை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக தென்காசியில் பெய்த கனமழை, குற்றாலம் அருவில் கடும் வெள்ள பெருக்கை ஏற்படுத்தியிருந்தது. இதில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து தென்காசியில் உள்ள அருவிகளில் குளிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சதுரகிரி மலைகோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்று கேள்வி எழுந்திருக்கிறது. விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் அமைந்துள்ள இந்த கோயிலில் வரும் 20ம் தேதி வைகாசி மாத பிரதோஷம், 23ம் தேதி பௌர்ணமி வழிபாடு நடக்க இருக்கிறது. இதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் இருக்கும் இந்த கோயிலுக்கு செல்ல வருடத்தின் சில குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே வனத்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர். காரணம் இக்கோயிலுக்கு செல்லும் வழியில் இருக்கும் காட்டாறுகள்தான். இந்த ஆறுகளை கடந்துதான் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியும். வழக்கமாக இந்த ஆறுகள் வறண்டு காணப்பட்டாலும் திடீரென பெய்யும் மழை காரணமாக எதிர்பாராத வெள்ளம் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எனவேதான் இங்க வனத்துறையினரின் கண்காணிப்பு அதிகம்.
தற்போதைய நிலையில் தமிழ்நாடு முழுவதும் கோடை மழை தீவிரமடைந்திருக்கிறது. சதுரகிரி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி மலை கோயிலுக்கு செல்லும் வழியில் இருக்கும் காட்டாறில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மழையை பொறுத்து அனுமதி வழங்கப்படும். ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டால் அனுமதிக்க மாட்டோம்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications