ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம்.. விருதுநகர் மாவட்டத்துக்கு ஜூலை 28 இல் உள்ளூர் விடுமுறை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் ஜூலை 28 ஆம் தேதி வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 28 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் சுகபுத்ரா அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். நடப்பு ஆண்டில் ஜூலை 28 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்பு பெற்ற கோயிலாகும். ஆண்டாளின் அவதார நாளான ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் இக்கோயிலில் தேரோட்டத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
நடப்பு ஆண்டில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 6 ஆம் தேதி பந்தல் அமைக்கப்பட்டு தேருக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கி, தினந்தோறும் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. தேரோட்டத் திருவிழாவானது ஜூலை 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது ஜூலை 28 ஆம் தேதி காலை 9.05 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தேரோட்டத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications