பரந்தூர் விமான நிலையத் திட்டம்.. விஜய்க்கு புரிதல் இல்லை.. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அட்டாக்!
விருதுநகர்: பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பான புரிதல் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-க்கு இல்லை என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். பரந்தூர் விவகாரத்தில் அரசியல் செய்ய தேவையில்லை என்று கூறியுள்ள மாணிக்கம் தாகூர், தமிழக வளர்ச்சியை கணக்கில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்தித்த சம்பவம் தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சித் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டு முடியவுள்ள நிலையில், முதல்முறையாக களத்திற்கு வந்து தவெக தலைவர் விஜய் மக்களை சந்தித்துள்ளார்.

இதற்கு முன்பாக எக்ஸ் தளத்திலும், அறிக்கையிலும் மட்டுமே விஜய் தமிழக அரசு மீது விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இந்த நிலையில் பரந்தூரில் மக்களை சந்தித்து விஜய் பேசுகையில், வளர்ச்சிக்கு எதிரானவன் நான் அல்ல. வளர்ச்சி தான் மக்களின் முன்னேற்றம். ஆனால் விவசாய நிலங்கள் அல்லாத, பாதிப்புகள் குறைவாக இருக்கும் இடமாக பார்த்து விமான நிலையத்தை கொண்டு வாருங்கள்.
வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை அதிகளவில் பாதிக்கும். நானும், தமிழக வெற்றிக் கழகமும் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து வழிகளிலும் உங்களுக்கு துணையாக உறுதியாக நிற்போம் என்று தெரிவித்தார். விஜய்-இன் இந்த பேச்சிற்கு பின் தமிழக அரசு தரப்பில் பரந்தூர் விமான நிலையம் மக்களை பாதிக்காத அளவிற்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேபோல் விஜய் பேச்சிற்கு திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து பதிலடியும் வந்துள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மக்களின் பிரச்சனைகள் குறித்து தவெக தலைவர் விஜய் பேசுவது வரவேற்கத்தக்க ஒன்று தான்.
தற்போது பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்துள்ளார். இந்த விவகாரத்தில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்-க்கு புரிதல் இருக்க வேண்டும். ஆனால் பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்த புரிதல் அவரிடம் இல்லை. கடந்த ஆண்டு கட்சி தொடங்கிய அவர், தற்போது தான் களத்திற்கே வந்துள்ளார். அரிட்டாபட்டி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியதோடு, நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தியுள்ளோம்.
ஆனால் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் அரசியல் தேவையில்லை. விமான நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் 4 இடங்களில் தேர்வு செய்து பரிந்துரைக்கப்பட்டது. அதில் 2 இடங்களை தான் மத்திய அரசு தேர்வு செய்தது. இந்த விஷயத்தில் அரசியல் செய்வதை விடவும் தமிழக வளர்ச்சியை கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications