விருதுநகர் கலெக்டரே ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பினார்.. பேன்சி ரக பட்டாசுகள் ஏன் ஆபத்தானவை?

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கட்டணார்பட்டி பட்டாசு ஆலையில் விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியின்போது மீண்டும் வெடித்த பட்டாசுகளால் 3 தீயணைப்பு அதிகாரிகள் காயம் அடைந்தனர். அப்போது விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா ஜஸ்ட் மிஸ்ஸில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நேற்றைய விபத்திற்கு பேன்சி ரக பட்டாசுகள் தான் முக்கியமான காரணம் ஆகும். இந்த பேன்சி ரக பட்டாசுகள் ஏன் ஆபத்தானவை என்பதை விரிவாக பார்ப்போம்.

முன்னதாக வெடிவிபத்தில் 25 பேர் பலியான பட்டாசு ஆலையில் மீட்பு பணிகளை விருதுநகர் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா நேரில் சென்று முடக்கிவிட்டார். அத்துடன் தீயணைப்பு அதிகாரிகள் அருகில் சென்று அவர் மீட்பு பணியையும் பார்வையிட்டார். அந்த நேரத்தில் திடீரென பட்டாசுகள் மீண்டும் வெடித்து சிதறின. இதில் மீட்பு பணியில் ஈடுபட்ட 3 தீயணைப்பு அதிகாரிகள், போலீசார் உள்பட 14 பேர் தீக்காயம் அடைந்தனர். கலெக்டர் உடனே வெளியே ஓடிவந்து ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பினார். காயம் அடைந்த 3 அதிகாரிகளும் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

Virudhunagar Collector Narrowly Escapes Death Why Are Fancy Firecrackers Dangerous

விபத்திற்கு காரணம்

25 பேர் உயிரிழக்க காரணமான சம்பவம் பற்றி விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா கூறுகையில், "உயிரிழந்த 23 பேரில் 16 பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. இதில் 2 பேர் சகோதரிகள் ஆவர். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்னிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விவரங்களை கேட்டறிந்தார். காயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க கூறி உள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அறிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். முழுமையான விசாரணைக்கு பின்னரே சம்பவத்துக்கான காரணம் குறித்து கூற முடியும்.

கலெக்டர் சுகபுத்ரா பேட்டி

ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலைகளில் உற்பத்தி நடக்கக்கூடாது என்ற விதி இருக்கிறது. இந்த பட்டாசு ஆலையில் விதிகளை மீறி ஞாயிற்றுக்கிழமையில் கூடுதல் பணியாளர்களை வைத்து பட்டாசு உற்பத்தி செய்தது தெரியவந்திருக்கிறது. சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு அவரது மேற்பார்வையில் விசாரணை நடத்தப்படும்" என்று கலெக்டர் சுகபுத்ரா கூறினார்.

ஆர்டர்கள் அதிகரிப்பு

பொதுவாக தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகைகளை கணக்கிட்டு பட்டாசு உற்பத்தி நடக்கும். தற்போது தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் காலம் என்பதால், இது சம்பந்தமாகவும் நிறைய ஆர்டர்கள் பட்டாசு ஆலைகளுக்கு கிடைத்து வருகிறது. எனவே ஆலைகளில் உற்பத்தி தீவிரமாக நடந்தது.

தேர்தல் காரணமாக இயங்கிய ஆலை

வருகிற 23-ந் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் நேற்று ஒரு சில ஆலைகளில் விடுமுறை தினத்திலும் பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடந்தது. அப்படி விடுமுறை தினத்தில் நடந்த பட்டாசு உற்பத்தி 25 பேருக்கு எமனாகி உள்ளது. பலரையும் முடமாக்கி உள்ளது.

யார் ஆலை

விருதுநகர் தாலுகா சங்கரலிங்கபுரம் அருகே உள்ள கோவிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த 52 வயதாகும் முத்துமாணிக்கம் கட்டணார்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கட்டணார்பட்டி பகுதியில் இயங்கி வந்தது. நேற்று காலையில் அந்த ஆலைக்கு ஆண்களும், பெண்களுமாக 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்

ஒரு அறையில் விபத்து

மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் மும்முரமாக இருந்த நிலையில் பட்டாசு தயாரிக்கும் ஒரு அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. உடனே அடுத்தடுத்து இருந்த அறைகளுக்கும் தீ பரவி, அந்த அறைகளில் இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதற தொடங்கியிருக்கிறது.

10 கிமீ கேட்டது

நேற்று தயாரித்து எல்லாமே பேன்சி ரக பட்டாசுகள் என்பதால், வீரியம் அதிகம் உள்ள வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருந்துள்ளது. இதனால் 10 கிமீ வரை வெடி விபத்தின் சத்தம் கேட்டிருக்கிறது. இதனிடையே வெடிவிபத்து நடந்ததும் ஆலையில் பணியாற்றியவர்கள் வெளியே ஓடி வர முயற்சித்தாலும், பலர் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து விருதுநகர், சிவகாசி, சாத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தண்ணீரை பீய்ச்சி அடித்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர்.

பேன்சி ரகங்கள்

நேற்று நடந்த விபத்திற்கு 'பேன்சி ரகங்கள்' தான் முக்கிய காரணம். பட்டாசுத் தொழிலில் 'பேன்சி ரகங்கள்' மற்றும் அவற்றில் பயன்படுத்தப்படும் 'அலுமினியம் பவுடர்' கலந்த வெடிமருந்துகள் தான் விருதுநகர் மாவட்டங்களில் பட்டாசு ஆலை விபத்துகளின் தீவிரத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. முதலில் பேன்சி ரக பட்டாசுகள் ஏன் ஆபத்தானவை என்பதை பார்ப்போம்.

பேன்சி ரக பட்டாசுகள் ஏன் ஆபத்தானவை

பொதுவாக நாம் வாங்கும் சாதாரணப் பட்டாசுகள் தரையோடு வெடித்துவிடும். ஆனால் பேன்சி ரகங்கள் வானில் உயரே சென்று பல வண்ணங்களில் வெடிக்க வேண்டும். இதற்காக இதில் 'லிப்ட் சார்ஜ்' மற்றும் 'பர்ஸ்ட் சார்ஜ்' என இரண்டு நிலைகளில் மருந்து வைப்பார்கள். இவற்றுக்கு அதிகப்படியான உந்துசக்தி தேவைப்படுவதால், சாதாரணப் பட்டாசுகளை விட அதிக வீரியமுள்ள மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஒரு அறையில் பேன்சி ரகங்கள் வெடித்தால், அவை ராக்கெட்டுகளைப் போலச் சிதறி அடுத்தடுத்த அறைகளுக்கும் மிக வேகமாகத் தீயைப் பரப்பும்.


அதிக வீரியமுள்ள வேதிப்பொருட்கள்

பேன்சி ரகங்களில் வண்ணங்களைக் கொண்டுவரவும், சத்தத்தை அதிகரிக்கவும் சில குறிப்பிட்ட வேதிப்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக சொல்வது என்றால், அலுமினியம் பவுடர்.. இதுதான் மிக முக்கியக் காரணி. இது ஆக்ஸிஜனுடன் வினைபுரியும் போது மிக அதிக வெப்பத்தையும் ஒளியையும் உமிழும். இது ஒரு விபத்தின் போது அணைக்க முடியாத அளவுக்குத் தீயை வேகப்படுத்திவிடும்.. இதனால் விபத்து நடந்தாலும் உடனே தடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.


பொட்டாசியம் குளோரேட் தடை செய்யப்பட்டது

அடுத்ததாக பொட்டாசியம் குளோரேட். உண்மையில் இது இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பொருள். ஆனால், சத்தம் அதிகமாக வர வேண்டும் என்பதற்காகச் சில இடங்களில் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இது உராய்வு ஏற்பட்டாலே வெடிக்கக் கூடியது. அடுத்ததாக பேரியம் நைட்ரேட்.. பச்சை நிற வெளிச்சத்தைக் கொடுக்க இதைப் பயன்படுத்துவார்கள். இதன் அடர்த்தி விபத்தின் போது நச்சுப் புகையை உருவாக்கும்.

பிளாஷ் பவுடர் மென்மையானது

பேன்சி ரகங்களில் பயன்படுத்தப்படும் 'பிளாஷ் பவுடர்' மிக மென்மையானது. மருந்துகளைக் கலக்கும்போது அல்லது ஒரு பாத்திரத்தில் இருந்து இன்னொரு பாத்திரத்திற்கு மாற்றும்போது ஏற்படும் மிகச் சிறிய உராய்வு அல்லது நிலையான மின்சாரம் (Static Electricity) கூட ஒரு பெரிய வெடிப்புக்கு வித்திடும். குறிப்பாக வெயில் காலத்தில் (தற்போது உள்ளது போல) வறண்ட வானிலை நிலவும்போது, இந்த உராய்வு விபத்துகள் நடக்க வாய்ப்புகள் அதிகமாகும்.

அதிக அளவில் மருந்து

நேற்றைய விபத்தை நாம் ஆய்வு செய்தால், ஒரு அறையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான தொழிலாளர்கள் இருக்கும்போதும், ஒரே அறையில் அதிக அளவு மருந்து குவித்து வைக்கப்பட்டிருக்கும்போதும் விபத்தின் கோர முகம் அதிகமாக தெரிந்துள்ளது. பேன்சி ரகங்கள் தயாரிக்கும் ஆலைகளில், பாதுகாப்பு விதிகள் மற்ற ஆலைகளை விட இன்னும் கடுமையாக இருக்க வேண்டும். ஆனால் லாப நோக்கில் அவை மீறப்படுவதுதான் இதுபோன்ற 25 பேர் பலி போன்ற பெரும் துயரங்களுக்குக் காரணமாகிறது என்பது கசப்பான உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+