டிரம்பின் அடாவடி.. குடும்பத்தை சந்திக்கவிடாமல்.. 30 ஆண்டு அமெரிக்காவில் வசித்த 73 வயது சீக்கிய பெண் நாடு கடத்தல்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பஞ்சாப்பை சேர்ந்த 73 வயது நிரம்பிய மூதாட்டியை அங்குள்ள அதிகாரிகள் நாடு கடத்தி உள்ளனர். மூதாட்டி என்று கூட பாராமல் அவரது கையில் கைவிலங்கு மாட்டி கடைசியாக குடும்பத்தினரிடம் கூட ‛குட்பை' சொல்ல விடாமல் தடுத்து நாடு கடத்திய சம்பவம் கலங்க வைத்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதுமே சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதாக அறிவித்தார். அதன்படி ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ராணுவ விமானத்தில் கையில் கைவிலங்கு போட்டு அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

மேலும் இந்த நடவடிக்கையை டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அதிகாரிகள் மூலமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் நாடு கடத்தும் விஷயத்தில் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் 73 வயது நிரம்பிய சீக்கிய பெண்ணிடம் அடாவடியாக நடந்து கொண்டதும், கடைசியாக குடும்பத்தினரை கூட சந்திக்க விடாமல் நாடு கடத்தி உள்ளனர்.
அதாவது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ஜித் கவுர் (வயது 73). சீக்கியர். இவரது கணவர் தவறிவிட்டார். 2 மகன்களுடன் பஞ்சாப்பில் வசித்தார். அதன்பிறகு 1992ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார். வடக்கு கலிபோர்னியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். உள்ள இந்திய துணிக்கடையில் அவர் வேலை செய்து வந்தார்.
இப்போது 2 மகன்களுக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. 2 பேரன்கள், 3 பேத்திகளுடன் ஹர்ஜித் கவுர் அமெரிக்காவில் மகிழ்ச்சியாக வசித்து வந்தார். ஹர்ஜித் கவுரிடம் அமெரிக்கா செல்வதற்கான உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்கா சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் அமெரிக்காவில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்தார். ஆனால் அமெரிக்கா சார்பில் அவருக்கு அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த 2012ம் ஆண்டில் நடந்த வழக்கில் அவருக்கு அடைக்கலம் கொடுக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் கூட பயண ஆவண சிக்கல் தீரும் வரை, ஒர்க் பெர்மிட் உடன் ஹர்ஜித் கவுர் அமெரிக்காவில் தொடர்ந்து இருக்கலாம் என்று அமெரிக்கக் குடியேற்ற துறை உறுதியளித்திருந்தது. மேலும் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை குடியேற்ற அதிகாரிகள் அலுவலகத்துக்கு வந்து ஆஜராக வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதையடுத்து ஹர்ஜித் கவுர் கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு 6 மாதத்துக்கும் ஒருமுறை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள குடியேற்ற அலுவலகத்திற்கு சென்று வந்தார்.
இந்நிலையில் தான் திடீரென்று குடியேற்ற அதிகாரிகள் அவரை ஜார்ஜியா அழைத்து சென்று அங்கிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி உள்ளனர். ஹர்ஜித் கவுர் கடந்த 23ம் தேதி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். இதுபற்றி நேற்று அவரது வழக்கறிஞர் தீபக் அலுவாலியா வீடியோ வெளியிட்டார். அப்போது தான் இந்த துயர சம்பவம் வெளியே தெரியவந்தது.
இதுதொடர்பாக ஹர்ஜித் கவுரின் வழக்கறிஞர் தீபக் அலுவாலியா கூறுகையில், ‛‛கடைசியாக குடும்பத்தினரிடம் ‛குட்பை' சொல்லக்கூட ஹர்ஜித் கவுருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரை அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கத்துறையினர் கட்டாயமாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஐசிஎம் மையத்துக்கு அழைத்து சென்றனர்.
நாங்கள் அதிகாரிகளிடம் 2 கோரிக்கையை வைத்தோம். கமர்சியல் விமானத்தில் அவரை அனுப்பி வைக்கிறோம் என்பதை ஒரு கோரிக்கையாகவும், கடைசியாக அவரது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டோம்.
ஆனால் அதிகாரிகள் 2க்கும் அனுமதி தரவில்லை. அதன்பிறகு அவர் ஜார்ஜியா மையத்தில் 2 நாட்கள் தங்க வைக்கப்பட்டார். வயதானவர்களுக்கு தேவையான வசதிகள் இல்லாமல் அவர் தங்க வைக்கப்பட்டார். அதன்பிறகு அங்கிருந்து டெல்லிக்கு நாடு கடத்தப்பட்டார். அவரது கையில் கைவிலங்கு போடப்பட்டது. '' என்றார்.












Click it and Unblock the Notifications